தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.10,000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உள்ளார்.
விளைநிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேறும் சகதியுமாக உள்ள நிலையில் தமிழக அரசு வீண் விளம்பரம் தேடி கொள்கிறது என்றும் விமர்சனம் செய்துள்ளார்.
பெங்கல் புயல் காரணமாக பெய்த கனமழையால் வடமாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள மக்களுக்கு தேமுக தரப்பில் பிரேமலதா விஜயகாந்த் நிவாரண உதவிகள் வழங்கினார்.
திண்டிவனம் பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை தே.மு.தி.க.,பொது செயாளர் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், வெள்ளம் சூழ்ந்த இடங்களை பார்வையிட்டதுடன், திண்டிவனம் நாகலாபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
அப்போது, கும்பகர்ண தூக்கத்தில் இருந்து திமுக அரசு விழிக்க வேண்டும் என்றும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்தநிலையில், இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஃபெங்கல் புயல் காரணமாக பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு தலா ரூ.10,000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், வெள்ளத்தால் பயிர் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை தமிழக அரசு வழங்க வேண்டும். விளைநிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேறும் சகதியுமாக உள்ள நிலையில் தமிழக அரசு வீண் விளம்பரம் தேடி கொள்கிறது என்று விமர்சனம் செய்தார்.