நீண்ட நாட்களுக்கு பிறகு தேர்தல் பிரச்சாரத்திற்காக விக்கிரவாண்டி வந்துள்ள விஜயகாந்திற்கு, தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திங்கட்கிழமை பதிவாகும் வாக்குகள், 24ம் தேதி எண்ணப்பட உள்ளன. இத்தேர்தலில் விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து திமுக நேரடியாக களம் காண்கிறது. நாங்குநேரியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் நிறுத்தப்பட, அதிமுக நேரடியாக களத்தில் மோதுகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இரு கட்சிகளின் தீவிர பிரச்சாரத்தால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இன்று மாலை 5 மணிக்கு பிரச்சாரம் ஓய்வு பெறும் நிலையில், கடைசி நாள் பிரச்சாரத்திற்காக விஜயகாந்த் விக்கிரவாண்டி வருவார் என்று அறிவிக்கப்பட்டது.
அதைப்போலவே விக்கிரவாண்டிக்கு கூலிங் கிளாஸ் அணிந்துக்கொண்டு, வெள்ளை சட்டை, நீல பேண்ட் அணிந்த படி காரில் வந்த விஜயகாந்திற்கு, தேமுதிக தொண்டர்கள் நீண்ட நேரம் காத்திருந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கிராம பகுதிகளில் தேமுதிகவுக்கு செல்வாக்கு இருப்பதோடு, தொகுதியில் உள்ள வன்னியர் வாக்குகள் பாமகவுக்கு கிடைக்கும் என்கிற கணக்கில் அதிமுகவினரும் விஜயகாந்திற்கு உற்சாக வரவேற்பை ஆங்காங்கே அளித்தனர்.
சமீபத்தில் பிரச்சாரத்தின் போது, விஜயகாந்தின் உடல்நிலை மட்டும் நன்றாக இருந்திருந்தால், தமிழக அரசியலின் நிலை வேறாக இருந்திருக்கும். ஸ்டாலின் இருக்கும் இடம் தெரியாமல், காணாமல் போயிருப்பார் என்று அமைச்சர் சி.வி சண்முகம் பேசியது தேமுதிக தொண்டர்களை உற்சாகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.