பெங்களூரு: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எடியூரப்பா அரசின் தோல்வியே அமைச்சர்களின் இலாகா மாற்றம் என மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்  டி.கே.சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. அங்கு ஆட்சி செய்யும் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு, கட்சி மற்றும் ஆட்சியில், தனக்கு எதிராக எழுந்துள்ள குழப்பங்களை சரிசெய்வதிலேயே தீவிரம் காட்டி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மாநில வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, 3 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக  மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவிடம் இருந்து சுகாதாரத்துறை பறிக்கப்பட்டு, அவருக்கு வேறுதுறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால் அமைச்சர் ஸ்ரீராமுலு எடியூரப்பா மீது மேலும் அதிருப்தியில் உள்ளார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், கொரோனா தொற்று பரவல் தொடர்பான நடவடிக்கையில்,  மாநில அரசின் தோல்விக்கு  அரசு மேற்கொண்டுள்ள மந்திரிகளின் இலாகா மாற்றமே ஒரு சாட்சி என்று தெரிவித்து உள்ளார்.
மேலும், சுகாதாரத்துறை மந்திரி மாற்றப்பட்டுள்ளது, எங்களின் குற்றச்சாட்டின் நம்பகத்தன்மைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. அதாவது அரசின் திறனற்ற நடவடிக்கைகளால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.