சென்னை,
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்தும், மாவட்ட தலைநகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மொத்தம் 11 ஆயிரத்து 645 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
தீபாவளி பண்டிகைக்கு ஒரு நாளைக்கு 4 ஆயிரத்து 208 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும், மொத்தம் 11 ஆயிரத்து 545 பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறினார்.
போக்குவரத்து நெறிசலை தவிர்க்கும் வகையில், வரும் 15 முதல் 17 ம் தேதி வரை, கார் மற்றும் இதர வாகனங்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியை தவிர்த்து, திருக்கழுக்குன்றம்- செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர்-செங்கல்பட்டு வழியாக செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தீபாவளி பண்டிகை நாடெங்கும் வருகிற 18-ந்தேதி (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை மற்றும் நகரங்களில் வசிப்பவர்கள் தீபாவளியை கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். அப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் இந்த நாட்களில், தங்களது பயணத்தை அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆந்திரா செல்லும் பேருந்துகள்
செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அண்ணாநகரில் (மேற்கு) உள்ள மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள்:
கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டை நீதிமன்ற பேருந்து நிறுத்தத்தில் (அதாவது சைதாப்பேட்டை மாநகர போக்கு வரத்துக்கழக பணிமனை எதிரில் உள்ள பேருந்து நிறுத்தம்) இருந்து புறப்படும்.
திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகளும் தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
பூவிருந்தவல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
மேற்கண்ட நான்கு தடப்பகுதிகளில் செல்லும் பேருந்துகளுக்கு 15, 16 மற்றும் 17 தேதிகளில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் வகையில் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள பயணிகள் 15 முதல் 17-ந்தேதி வரை மாற்றிய மைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் சென்று பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இத்தடப் பகுதிகளில் பயணம் செய்ய உள்ள பிற பயணிகளும் அந்தந்த மாற்றி யமைக்கப்பட்ட பேருந்துகள் புறப்படும் இடங்களுக்கு சென்று பயணம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
(மயிலாடு துறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூர்).
பஸ் செல்லும் பாதை விவரம்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம் பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத் பேட்டை, வெளிசுற்றுச் சாலை வழியாக வண்டலூர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனால் முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் குறிப்பாக முன் பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் (கிளாம் பாக்கம்) தற்காலிக பேருந்து நிறுத்தம் சென்றடைந்து அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்திற்கு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம்.
15 முதல் 17-ந்தேதி வரை கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுகுன்றம்-செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு வழியாக சென்றால், போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம்.
அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் இணைப்பு பேருந்துகள் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படும்.
சென்னையிலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்குச் செல்ல தினசரி இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் கூடுதலாக 15-ந்தேதி 788 சிறப்பு பேருந்துகள், 16-ந்தேதி 1,844 சிறப்பு பேருந்துகள், 17-ந்தேதி 2,188 சிறப்பு பேருந்துகள் என 15 முதல் 17-ந்தேதி வரை மொத்தம் 4,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
ஆக ஒட்டுமொத்தமாக மூன்று நாட்களிலும் சேர்த்து சென்னையிலிருந்து 11,645 பேருந்துகள் இயக்கப்படும்.
மாநிலத்தின் பிற முக்கிய ஊர்களிலிருந்து 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்களிலும் 11,111 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
அதன்படி 15-ந்தேதி 1,291 சிறப்பு பேருந்துகள், 16-ந்தேதி 3,865 சிறப்பு பேருந்துகள், 17-ந்தேதி 5,955 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 11,111 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பிற இடங்களில் இருந்து சென்னைக்கு 19 முதல் 22-ந்தேதி வரை தினசரி இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் கூடுதலாக 3794 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அதாவது 19-ந்தேதி 1,338 சிறப்பு பேருந்துகள், 20-ந்தேதி 466 சிறப்பு பேருந்துகள், 21-ந்தேதி 492 சிறப்பு பேருந்துகள், 22-ந்தேதி 1,498 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,794 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பிற முக்கிய பகுதிகளிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 19 முதல் 22-ந்தேதி வரை 7043 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி 19-ந்தேதி 1,933 சிறப்பு பேருந்துகள், 20-ந்தேதி 1,300 சிறப்பு பேருந்துகள், 21-ந்தேதி 1,400 சிறப்பு பேருந்துகள், 22-ந்தேதி 2,410 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 7,043 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
கடந்த ஆண்டுகளைப் போல, 300 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணைய தளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், கணினி மூலம் உடனடி தள முன் பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுண்டர்களும் (தாம்பரம் சானிடோரியத்தில்) 2 சிறப்பு முன்பதிவு கவுண்டர்களும், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு கவுண்டரும் ஆக மொத்தம் 29 சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் அமைக்கப்படும்.
இந்த சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் வரும் 13-ந்தேதி முதல் செயல்படும். பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 044-24794709 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளலாம்.
இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.