சென்னை:

தீபாவளியன்று விதியை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல மதுரையில் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காற்று மாசை தடுக்கும் வகையில், தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.  இதையடுத்து காலை  6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பல இடங்களில் 24 மணி நேரமும் பட்டாசு வெடிக்கும் சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தன.  பல இடங்களில் காலக்கெடுவை தாண்டியும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

இந்த நிலையில் விதிகளை மீறி பட்டாச வெடிப்பவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி மதுரையில் 50 பேர் மீதும், சென்னையில் 115 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பட்டாசு வெடிப்பது தொடர்பாக  விதிகளை மீறுவோரை கைது செய்ய தனி சட்டப்பிரிவு இல்லாததால், இந்திய தண்டனைச் சட்டம் 188-வது பிரிவின் கீழ் அரசு உத்தரவுக்கு கீழ்படியாமல் இருத்தல் மற்றும் தீப்பற்றும் பொருளை தவறாக பயன்படுத்துவதைக் குறிக்கும் 285-ம் பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.