சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி, பொதுமக்கள் வெடித்த வெடிகளால்,  சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் கடந்த ஆண்டை விட குறைவு என்றம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி காற்று மாசு 154 ஆக சராசரியாக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் நேற்று (அக். 20ந்தேதி) தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதுபோல தமிழகத்திலும்  இந்த ஆண்டு வழக்கமானதை விட  மிகவும் உற்சாகத்துடன் தீபாவளியை மக்கள் கொண்டாடினர்.  சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 19ந்தேதி முதலே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இடையிடையே மழை பெய்தாலம், பொதுமக்கள் அதை பெருட் படுத்தாமல் புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் பரிமாறி கோலாகலமாக தீபாவளியை கொண்டாடினர்.

தலைநகர் சென்னையிலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு 11மணி வரை  இடைவிடாது பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. இதனால் வானில்  எங்கு நோக்கிலும் நட்சத்திரங்களாக காட்சி அளித்தனர்.

இந்த நிலையில்,  பட்டாசுகள் வெடித்ததன் காரணமாக காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. இதனால் விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும் தாமதமானது.

சென்னையில் காற்று மாசு தரக்குறியீடு 154 ஆக சராசரியாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 80 ஆக இருந்த நிலையில், உயர்ந்ந்துள்ளது. அதிகபட்சமாக பெருங்குடியில் 217 ஆகவும், மணலியில் மற்றும் வேளச்சேரியில் 151-ம், ஆலந்தூரில் 128-ம், அரும்பாக்கத்தில் 145 ஆகவும் காற்று மாசு பதிவாகியிருந்தது.  ஆனாலும், இது கடந்த ஆண்டு தீபாவளியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 287 ஆக பதிவாகியிருந்தது. குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 150 ஆகவும் பதிவாகியிருந்தது. காற்று மாசு கடந்த ஆண்டு மிக மோசமாக பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு மிதமான அளவில் பதிவாகியுள்ளது. தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் இடைஇடையே கனமழை பெய்ததே காற்று மாசு குறைவுக்கு முக்கிய காரணமாக தெரிகிறது.