டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்து உள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி, மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் குறைந்த பட்ச தொகை முதல் 3 மாதம் வரையிலான ஊதியம் போனசாக வழங்கப்படுவது வழக்கம். இதை அனைத்து தரப்பு தொழிலாளர்களும் பெரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பார்கள். இந்த நிலையில்,   மத்தியஅரசு தீபாவளி பரிசாக ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படும் அறிவித்து உள்ளது.

டிராக் பராமரிப்பாளர்கள், ஓட்டுநர்கள், காவலர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், டெக்னீசியன் ஹெல்பர், கன்ட்ரோலர், பாயின்ட்ஸ்மேன்கள், மினிஸ்டிரியல் ஊழியர்கள் மற்றும் பிற குரூப் ‘சி’ ஊழியர்கள் எனப் பல்வேறு பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, தகுதியான ரயில்வே ஊழியருக்கு அதிகபட்சமாக 78 நாட்கள் ஊதியம், அதாவது ரூ.17,951 கிடைக்கும். இதனால் ரயில்வே அமைச்சகத்துக்கு  ரூ.1,832.09 கோடி தேவை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  கோவிட்-19க்கு பிந்தைய சவால்களால் ஏற்பட்ட பாதகமான நிதி நிலைமை இருந்தபோதிலும் ரயில்வே தொழிலாளர்களின் நலன் கருதி மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரயில்வேயின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக ரயில்வே ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக PLB செலுத்துதல் ஒரு ஊக்கமாக செயல்படுகிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்தியஅமைச்சர் அனுராக் தாக்கூர் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக,  கூறினார். மேலும்,  எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.72,000 கோடி ஒரே தவணையாக மானியமாக வழங்கவும் கேபினட் அனுமதி வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.