சென்னை: தொலைதூர கல்வி பட்டதாரிகளுக்கு அரசு பணியில் பதவி உயர்வு கிடையாது என சென்னை  உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. இது அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசு பணியில் உள்ள பெரும்பாலோர், பணியில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுகளுக்காக தொலைதூரக்கல்வி மூலம் உயர்படிப்பு படித்து பட்டம் பெற்று வருகின்றனர். இதுபோன்ற தொலைதூர படிப்புகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. அதை சாதகமாக்கி பட்டம் பெறுபவர்கள், அதற்கான தகுதிகளை பெற முடியாத நிலையிலேயே உள்ளனர். தனியார் நிறுவனங்கள் தொலைதூரப் பட்டதாரிகளின் பட்டங்களை கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை. ஆனால், அரசு பணிகளில் வேலை செய்பவர்கள், தொலைதூரக்கல்வியில் படத்தை வாங்கி, அதன்மூலம் பணப்பலன் பெற்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான அரசு பள்ளி ஆசிரியர்கள்,  சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுக்காக இதுபோன்ற உயர் பட்டப்படிப்புகளை பெற்று, சம்பளத்தை அதிகரித்துள்ள நிலையில், அவர்களால், தங்களின் பட்டத்திற்கேற்ப செயல்படாத சூழல் நிலவி வருகிறது. எம்.ஏ. படித்தவர்களால் 5ம் வகுப்புக்கூட பாடம் நடத்த முடியாத நிலை உள்ளது.

இதுபோன்ற தகுதியற்ற பதவி உயர்வுகளை தடுக்கும் வகையில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி,  தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வுக்கு தகுதியானர்வர்களே என தீர்ப்பு கூறியிருந்தார். அதன்படி, தமிழ்நாடு பத்திரப்பதிவு துறையில் 2ம் நிலை சார்பதிவாளர் பதவி வகித்த செந்தில்குமாருக்கு பதவி உயர்வு வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இன்று  சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதிவு உயர்வு கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு.

அதாவது,  தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள், அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது. அவர்கள்  பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற தகுதியில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மேல்முறையீடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.