பாட்னா :
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.
தேசிய அளவில் பா.ஜ.க..வுடன் கூட்டணி வைத்துள்ள மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி, பீகாரில் தனித்து போட்டியிடுகிறது.

பா.ஜ.க. வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ள லோக்ஜனசக்தி, ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்களை எதிர்த்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் பா.ஜ.க.வில் டிக்கெட் கிடைக்காத அதன் மூத்த தலைவர்கள், அந்த கட்சியில் இருந்து விலகி , லோக்ஜனசக்தியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.
பீகார் மாநில பா.ஜ.க. முன்னாள் துணை தலைவர் ராஜேந்திர சிங், தினாரா தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் அந்த தொகுதி, ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த ராஜேந்திர சிங், கடந்த செவ்வாய்க்கிழமை, லோக்ஜனசக்தியில் இணைந்தார்.
அவருக்கு தினாரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுவது உறுதியாகி விட்டது. இந்த நிலையில், பீகார் மாநில பா.ஜ.க.பெண் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான உஷா வித்யார்த்தி நேற்று, லோக்ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் முன்னிலையில், அந்த கட்சியில் சேர்ந்துள்ளார்.
டிக்கெட் கிடைக்காத மேலும் பல பா.ஜ.க.. தலைவர்கள் , வரிசையாக லோக்ஜனசக்தியில் இணைவார்கள் என பஸ்வான் கட்சியினர் தெரிவித்தனர்.
-பா.பாரதி