ஜெனிவா: இந்தியாவில் தலித் பெண்கள் மீதான தாக்குதல் அதிகம் நடைபெறுவதாக கவலைத் தெரிவித்துள்ள ஐ.நா. உத்தரபிரதேச மாநிலத்திலேயே அதிக அளவிலான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்து உள்ளது.

மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சி தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் தலித்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் தலித் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. இதை இந்திய குற்ற ஆவணக் காப்பகமும் தெரிவித்து உள்ளன.

இதுதொடர்பாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தலித் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல் வேதனை அளிப்பதாகவும்,  பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை  தற்போதைய அரசு  தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும், இந்தியாவில்  பெண்களுக்கு எதிராக 3,78,236 வழக்குகள் பதிவாகி  இருப்பதாகவும், அதுவே, கடந்த ஆண்டு (2019)  பெண்கள் மீதான தாக்கதல்கள்  4 லட்சமாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்திருப்பதுடன்,  பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில், தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எடுத்துக் கொண்டால், 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019-இல் 7.3 சதவீதமும், பழங்குடியின பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 26 சதவீதமும் அதிகரித்துள்ளன.

தற்போது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள ஹத்ராஸ்  சம்பவம் குறித்தும் கவலை தெரிவித்துள்ள ஐ.நா. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வாறு நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆளும் அரசின் கடமை என்றும் கூறியுள்ளது.

அதுபோல,  தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பெண்களுக்கு எதிரான வழக்குகளில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 11,829 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.