சென்னை: தொகுதிப்பங்கீடு தொடர்பாக திமுக தொகுதி பங்கீடு குழு மீது அதிருப்தி அடைந்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், இன்று திமுக தலைவரும், முதலமைச்சரு மான மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என 4 முனை போட்டிகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், திமுக கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில், திமுக 23 இடங்களில் போட்டியிடவும், 17 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்தே கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. அதன்படி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், ஐயுஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம், கொமதேகவுக்கு நாமக்கல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டது.
அடுத்த கட்டமாக, காங்கிரஸ் கட்சிக்கு 6 மற்றும் புதுச்சேரி, விசிகவுக்கு 2, மதிமுகவுக்கு 1 தொகுதிகளை ஒதுக்கும் வகையில் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. மேலும், காங்கிரஸ் கட்சி தனக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் ஒன்றை மநீம கட்சிக்கு வழங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. ஆனால், இதை காங்கிரஸ் ஏற்கவில்லை.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்ட தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. அதுபோல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் இடம் ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது.
ஆனால், விசிக தனக்கு கூடுதலாக ஒரு பொது தொகுதியை வழங்குவதுடன், மூன்றிலும் தங்கள் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால், திமுக தலைமையோ உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என வலியிறுத்தி வருகிறது. இதனால், இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி இறுதியாவதில் இழுபறி நீடித்து வருகிறது.
இதன் காரணமாக, திமுகவின் தேர்தல் கூட்டணி குழுவை சந்திக்க மறுத்து வரும் விசிக தலைவர் திருமாவளவன், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த சந்தித்து பேசினார். இதில், முக்கிய முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.