சென்னை,
அதிமுக உடைந்ததை தொடர்ந்து சசிகலா அணி சார்பாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றார். அப்போது, அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தனர்.
இதற்கிடையில், ஓபிஎஸ் அணியும், எடப்பாடி அணியும் சசிகலா அணிக்கு எதிராக ஒன்றாக சேர்ந்தது. இதையடுத்து சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் கவர்னரிடம், எடப்பாடியை மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுத்தனர். இதன் காரணமாக அவர்களை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதை எதிர்த்து ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசுக்கு எதிராக வாக்களித்ததாக ஓ.பன்னீர்செல்வம் – 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஏற்கனவே இதுகுறித்து, ஓ.பி.எஸ். மற்றும் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சபாநாயகர் இதுவரை எந்தவித முடிவும் தெரிவிக்காத நிலையில், தற்போது டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஏற்கனவே, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விஷயத்தில் சபாநாயகர் பாரபட் சத்துடன் நடந்து கொள்வதாக கூறி தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. அடுத்தக்கட்ட விசாரணை வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தனியாக வழக்கு தொடர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா அல்லது, திமுக வழக்கோடு சேர்த்து விசாரிக்கப்படுமா என்பது விரைவில் தெரிய வரும்.