சென்னை: வெள்ள நிவாரணம் வழங்குவதில் தகராறு  காரணமாக ரேசன் கடை ஊழியரை ஒருவர் கத்தியால் வெட்டினார்.  அவரது வாயில் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில்  அரங்கேறி உள்ளது.

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வெள்ள நிவாரண உதவிப்பணம் ரூ.6000 வழங்கப்பட்டு வரும் நிலையில்,  பல இடங்களில் ரேசன் கடை ஊழியர்கள் பொதுமக்களை அலைக்கழிப்பதாகவும், மரியாதை இன்றி நடத்துவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில்,  திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரணத் தொகை 6000 ரூபாய் வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் ரேஷன் கடை விற்பனையாளரை கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  எல்லாபுரம் பகுதியில்   குடும்ப அட்டைதாரர்களுக்கு  அங்குள்ள  நியாய விலைக் கடை மூலம் அரசு அறிவித்த 6000 ரூபாய் வெள்ள நிவாரணத் தொகை கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது. 100க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்ட நிலையில், எல்லாபுரம் அருந்ததி நகரைச் சேர்ந்த முருகன் (வயது 37) என்பவருக்கு சிக்னல் கோளாறு காரணமாக கைரேகை வைப்பதில் கடந்த இரண்டு நாட்களாக சிக்கல் நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ரேசன் கடை ஊழியருக்கும், முருகனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ரேசன் கடை ஊழியர் மரியாதை இன்றிய பேசியதால், ஆத்திரம் அடைந்த முருகன்,  தான் வைத்திருந்த கத்தியால், ரேசன் கடை  விற்பனையாளர் ராஜேந்திரனின் கை, வாய், கழுத்து மற்றும் முகத்தில் வெட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த ரேஷன் கடை விற்பனையாளரை அப்பகுதி மக்கள் மீட்டு முதலுதவிக்காக பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்மு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.