பெங்களூரு:
திஷா ரவி கைது விவகாரத்தில் டெல்லி போலீசார் விதிமுறையை சரியாக கடைபிடிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடிக்க, காலிஸ்தான் ஆதரவாளர்களால் தான் இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டதாக டெல்லி போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக, ட்விட்டரில் உலவிய டூல்கிட்டை இதற்கு ஆதாரமாக தெரிவித்தனர்.

வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் என்ன மாதிரியான ஹேஷ்டேக் உருவாக்க வேண்டும், எப்படிப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டும், போராடும் விவசாயிகளுக்கு ஏன் ஆதரவு அளிக்க வேண்டும்? என நீண்ட விவரங்கள் அடங்கியதுதான் டூல்கிட். அந்த டூல்கிட்டை பகிர்ந்துதான் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.

இந்த டூல்கிட்டை பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுச்சூழலியல் ஆர்வலர் திஷா ரவி என்பவர் சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்ததால், அவர் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து திஷா ரவியை டெல்லி போலீஸின் சைபர் பிரிவு நேற்று பெங்களூருவில் வைத்து கைது செய்தது. பிறகு, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 5 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், பெங்களூரு போலீஸாருக்கே தெரியாமல், டெல்லி போலீஸ், நகரத்துக்குள் வந்து திஷாவை கைது செய்திருப்பது தெரியவந்துள்ளது. திஷா கைது செய்யப்பட்டு, டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லும் வரை பெங்களூரு போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து பெங்களூரு போலீஸ் தரப்பில், “டெல்லியில் இருந்து இரண்டு பெண் போலீஸ் உட்பட ஐந்து போலீஸார் பிப்.14 மதியம் 12 மணியளவில் பெங்களூரு வந்திருக்கின்றனர். அவர்கள் நேராக திஷா வீடு அமைந்துள்ள வடக்கு பெங்களூருவுக்கு சென்றுள்ளனர். உடனடியாக அவர்கள் வீட்டுக்குள் நுழையாமல், திஷாவின் மொபைலை டிராக் செய்து, அவர் வீட்டுக்குள் தான் இருக்கிறார் என்பதை முதலில் உறுதிப்படுத்தி உள்ளனர்.

முதலில் மூன்று போலீஸார், காரில் திஷா வீட்டை நோட்டமிட்டு சென்று, பிறகு இரண்டு பெண் போலீஸாரை அழைத்து வந்துள்ளனர். மூன்று போலீஸாரும் வீட்டிற்கு வெளியே நிற்க, இரு பெண் போலீஸ் மட்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அதன் பிறகு, ஒருவர் மட்டும் வெளியே நிற்க, மீதிருந்த இரு ஆண் காவலர்களும் உள்ளே நுழைந்து மாலை 5 மணிக்கு கைது படலத்தை நிறைவு செய்துள்ளனர்.

திஷா கைது செய்யப்பட்ட பிறகு, அவருடைய லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை இரண்டு காவலர்கள் ஆய்வு செய்துள்ளனர். இதனை மற்றொரு காவலர் படம் பிடித்துள்ளார். மேலும், டெல்லி சைபர் கிரைம் போலீஸ் தனது மகள் மீது வழக்குப்பதிந்து கைது செய்து அழைத்துச் செல்கிறது என்பது குறித்த ஆவணத்தில் திஷாவின் தாயாரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

திஷாவுக்கு தேவையான உடைகள், பழங்கள், கண் மருந்து உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்டு, போலீஸாரின் ஒரு பிரிவு, 5.30 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து அவரை அழைத்துச் செல்ல, மற்றொரு பிரிவு பெங்களூரு போலீஸாரிடம் கைது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.