டெல்லி: மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு போல, கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு கொண்டு வரப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், அதுபோன்ற திட்டம் ஏதும் இல்லை, ஆனால் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என ஏஐசிடிஇ (AICTE ) தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும மருத்துவப் படிப்புகளுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2021 கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு முதல், சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இயற்கை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும், நர்சிங் மற்றும் உயிர் வேதியியல், உயிர் விலங்கியல், நுண்ணறிவியல் போன்ற கலை அறிவியல் கல்லூரியில் உள்ள உயிர் அறிவியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையின் கீழ் கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து, கலை அறிவியல் கல்லூரியில் படிப்புக்கும் நீட் தேர்வு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், அதுகுறித்து ஏஐசிடிஇ தலைவர் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, “கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் ஏதும் தற்போது இல்லை. ஆனால், அது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
மாணவர்களின் அடிப்படைக் கற்றல் திறனை சோதிப்பது அவசியம் என்று கூறியுள்ள சஹஸ்ரபுதே கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவுகளில் மாணவர்களின் திறனை சோதிக்க நேர்முகத்தேர்வோ, அல்லது எழுத்துத் தேர்வோ நடத்தப்பட வேண்டிடும் என்றும், “11, 12-ம் வகுப்பில் எந்த பாடத்தை அடிப்படையாகக் கொண்டு படித்தாலும், வேறு வகையான உயர்கல்வி படிப்புகளில் சேரலாம். ஆனால் அவ்வாறு சேரும் முன், குறிப்பிட்ட உயர்கல்வி படிப்பு தொடர்பான பாடப்பிரிவுகளிலும் அந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், புதிய கல்விக்கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, “5+3+3+4 என்ற கல்வி முறையை கொண்டுவருவதே வாய்ப்புகளை உருவாக்கத்தான் என்றவர், . 5+3+3+4 கல்வி முறை வந்த பின் ஒருவர் எந்த வகையான படிப்புகளிலும் சேர முடியும் என்றும் தெரிவித்தார்.