சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்கிய சீமானின் நாம் தமிழர் கட்சியை தமிழக மக்கள் புறக்கணித்துள்ளனர். தென்மாவட்டங்களில் மட்டும் ஐந்தே ஐந்து இடங்களை மட்டுமே நாம் தமிழர் கட்சி பிடித்துள்ள்ளது. குமரி மாவட்டத்தில் 4 இடங்களிலும், தென்காசியும் ஒரு இடமும் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்று 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில், 12,838 நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் தனித்து களமிறங்கிய நாம் தமிழர் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. சீமானுக்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக கூறப்படும் நிலையில், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அவரது வேட்பாளர்கள் ஒன்றை இலக்க வாக்குகளை மட்டுமே பெற்று பெருந்தோல்வியை சந்தித்து உள்ளனர்.
உள்ளாட்சியில்.. வரப்போகுது.. வரப்போகுது.. மாற்றம்! ஏற்றம் தரும் விவசாயி சின்னம் அதுவே மாற்றம் விரும்பும் மக்களின் எண்ணம் என்று கூறிய நாம் தமிழர் கட்சிக்கு விவசாயிகள் வசிக்கும் பேருராட்சி பகுதிகளிலும்கூட விவசாயி சின்னத்தில் வாக்கு கிடைக்கவில்லை. இது சீமானுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் களமிறங்கிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 5 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
- அதன்படி, கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதிக்குட்பட்ட இரணியல் பேரூராட்சியின் 1வது வட்டத்தில் நாம்தமிழர்கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் சு.சுரேஷ் வெற்றிபெற்றுள்ளார்.
- கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட மருங்கூர் பேரூராட்சியின் 10வது வட்டத்தில் நாம்தமிழர்கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் சகாய ஜெமிலா வெற்றிபெற்றுள்ளார்
- கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதிக்குட்பட்ட கல்லுக்கூட்டம் பேரூராட்சியின் 10வது வட்டத்தில் நாம்தமிழர்கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் பொ.ரூபன் வெற்றிபெற்றுள்ளார்.
- கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதிக்குட்பட்ட கல்லுக்கூட்டம் பேரூராட்சியின் 8வது வட்டத்தில் நாம்தமிழர்கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் வ. கீதாமலர் வெற்றிபெற்றுள்ளார்.
- தென்காசி மாவட்டம், தென்காசி தொகுதிக்குட்பட்ட சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியின் 14வது வட்டத்தில் #நாம்தமிழர்கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ச.சுப்புலட்சுமி வெற்றிபெற்றுள்ளார்.
தமிழக மக்கள் சீமானின் நாம் தமிழர் கட்சியையும் வெகுவாக புறக்கணித்து வருகின்றனர் என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் பறைசாற்றுகின்றன. நாம் சீமானோ, 2014 நாடாளுமன்ற தேர்தல், 2016 தமிழநாடு சட்டமன்ற தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவோம் என்று கூறியுள்ளார்.