கருணாஸ் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீடு, சென்னையில் நடைபெற்றது. ஆடியோவை இயக்குநர் பாரதிராஜா வெளியிட, சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வில், நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன், “இங்கு மேடையில் இயக்குநர் சரவணன் பேசும்போது,‘ தமிழ் சினிமாவின் பொற்காலம் இது’ என தவறான தகவலை சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பது, இயக்குநர் பாரதிராஜா படம் இயக்கிய காலம்…நாங்கள் நடித்த காலம்.. என அதனைத்தான் குறிப்பிடவேண்டும். தற்போது எல்லாம் மாறிவிட்டது.
தமிழ் சினிமா எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என குறிப்பிட வேண்டுமென்றால், இன்று தமிழகத்தில் வேற்று மொழி படங்கள் தான் அதிக வசூலை குவிக்கிறது. சமீபத்தில் வெளியான அஜித் படம் மற்றும் விஜய் படம் ஆகியவற்றில், தயாரிப்பு செலவின் 90 சதவீதத்தை அவர்கள் ஊதியமாக பெற்றனர்.
இந்தப் போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் படம் எடுக்கும் பொழுது 10% தான் சம்பளம், மீதி 90% படத் தயாரிப்பிற்காக இருக்கும். அந்தக் காலகட்டத்தில் தமிழ் சினிமா கதைகள் பட உருவாக்கத்தால் வென்றது” என்றார்.
இயக்குநர் அமீர் பேசுகையில், ”அருண்பாண்டியன் பேசும்போது ‘தமிழ் சினிமா எல்லா வகையிலும் பின் தங்கி இருக்கிறது’ என சொன்னார். இதை நான் ஏற்க மறுக்கிறேன். இந்தியாவிற்கே புதிய பாணியிலான சினிமாவைக் கற்றுக் கொடுத்தது தமிழ் சினிமா. ஒருநாளும் தமிழ் சினிமா பின் தங்காது. ‘ஆர் ஆர் ஆர்’, ‘கே ஜி எஃப்’ போன்ற படங்களை வைத்து தமிழ் சினிமாவை எடை போடாதீர்கள்.
ஏனென்றால் நாங்கள் அந்த காலத்திலேயே ‘சந்திரலேகா’ என்ற பிரமாண்டமான படைப்பை உருவாக்கி இருக்கிறோம். ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘நாடோடி மன்னன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ போன்ற படைப்புகளுக்கு நிகராக இதுவரை வேறு எந்த மொழிப் படங்களும் உருவாகவில்லை. சமூக படைப்புகளுக்கு இணையாகவோ எளிமையான படைப்புகளுக்கோ ஈடு இணை இல்லை. அதனால் தமிழ் சினிமா எப்போதும் இந்திய சினிமாவிற்கு முன்னோடி தான். ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப வணிக சினிமாவாக மாறும்போது மாற்றங்கள் ஏற்படும். ‘16 வயதினிலே’, ‘கிழக்கு சீமையிலே’ போன்ற படங்கள் வெளியான போதும், வணிக சினிமா இருந்திருக்கிறது. ஆனால் அவை ஒருபோதும் இவை வெளியாவதற்கு தடையாக இருந்ததில்லை” என்றார்.
பாரதிராஜா பேசுகையில், “எனக்கு மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால் அதிலும் சினிமாக்காரன் ஆகவே பிறக்க வேண்டும்.
சினிமா கம்பெனிகளில் நமக்கு கிடைக்கும் பேரும் புகழும் வேறு எங்கும் கிடைப்பதில்லை. சினிமா தொழில் தான் நல்ல தொழில்.. ஒரு தயாரிப்பின் மதிப்பு 100 ரூபாய். 70 ரூபாய் செலவில் அந்த தயாரிப்பு உருவாகிறது என்ற கவலை அவருக்கு அருண் பாண்டியனுக்கு ஏனென்றால் அவர் தயாரிப்பாளராகவும் இருந்தவர்.
நடிகர்கள் சம்பளம் வாங்குவது தவறென்று சொல்லவில்லை ஆனால் ஒரு பட தயாரிப்பின் உங்களுடைய பங்கு எவ்வளவு என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் அண்மைக்காலமாக பிரமாண்டமாக செலவழித்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். அந்த வகையில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள் தற்போதைய சூழலில் தெலுங்கு சினிமா ஒருபடி உயர்வாகவே இருக்கிறது ” என்றார்.
தமிழ்த் திரைப்படத்துறையே உயர்ந்து நிற்கிறது என்று அமீர் பேசியதற்கு மறுப்பாக தெலுங்கு திரையுலகம்தான் உயர்ந்து நிற்கிறது என பாரதிராஜா பதில் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.