சென்னை

னுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க அப்பட இயக்குநர் வெற்றிமாறன் ஒப்புக் கொண்டுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவான அசுரன் திரைப்படம் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.  இந்தப் படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் கருணாஸின் மகன் கென் நடித்துள்ளார்.  தனுஷின் இளைய மகன் சிதம்பரமாக அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் வெற்றிமாறனிடம் நடிகர் கருணாஸ் இந்தப் படத்தில் இடம்பெறும் ’ஆண்ட பரம்பரை’ என்னும் வசனத்துக்கு அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்ட பரம்பரை என்னும் வார்த்தை அவரது இனமான முக்குலத்தோரைக் குறிப்பது போல் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி வெற்றிமாறன் அந்த வசனத்தை நீக்கி அதைச் சப்தமின்றி மாற்றி உள்ளார்.  இதற்கு நெட்டிசன்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.   கருணாஸ் மகன் கென் நடிப்பு இந்தப் படத்தில் நன்றாக இருப்பதாகவும் அது குறித்து எதுவும் தெரிவிக்காத கருணாஸ் வசனத்தை நீக்கச் சொன்னதை பலரும் விமர்சித்துள்ளனர்.

நடிகர் கருணாஸ் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன்  படத்தில் நடித்துள்ளார்.  பொல்லாதவன் படத்தின் நாயகன் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.