நெட்டிசன்:

செய்தியாளர் விஷ்வா விஸ்வநாத் அவர்களின் முகநூல் பதிவு:

மூக ஊடகத்தில் ஆபாசத் தாக்குதலுக்கு ஆளான கக்கூஸ் பட இயக்குனர் திவ்ய பாரதி பெண் இல்லையா என்ன ?

நீங்கள் ஒரு பெண் என்கிறபோது உங்களை பொதுவெளியில் சமூக ஊடகங்களில் யாராவது ஆபாசமாக உங்களைத் தாக்கினால், உங்களைப் பாதுகாக்க ஊடத்துறையினர் கூட்டமாக வந்து நிற்கவேண்டும் என்றால், செய்தி வெளியிடவேண்டும் என்றால், காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றால், தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றால்…

நீங்கள் மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலத்தை ஆவணப்படம் எடுத்த திவ்யா என்ற பெண்ணாக இருக்கக்கூடாது. அவ்வளவு ஏன் நீங்கள் ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவே இருக்கக்கூடாது.

தன்யா – திவ்யா

நீங்கள் ஒரு ஆங்கில அல்லது இந்தித் தொலைக்காட்சியின் செய்தியாளராகவோ, பத்திரிகையாளராகவோ இருந்தால் போதுமானது.

கக்கூஸ் என்ற ஆவணப்படத்தை எடுத்து வெளியிட்ட திவ்ய பாரதிக்கு சமூக ஊடங்கள் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் ஆயிரக்கணக்கான ஆபாச மிரட்டல்கள், வன்புணர்ச்சி செய்து வெட்டிக் கொன்று விடுவதாக மிரட்டல்கள் வந்து அவர் புகார் கொடுத்தபோது புகாரைப் பதிவுகூட செய்யாமல் மாறாக திவ்யபாரதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எத்தனிக்கும் அதே தமிழ்நாடு காவல்துறையினர்தான்…

விஜய் என்ற ஒரு நடிகரைத் தனிப்பட்ட முறையில் (முக்கியக் குறிப்பு: செய்தி வெளியிட்டு அல்ல) ட்வீட்டரில் விமர்சனம் செய்த தன்யா ராஜேந்திரன் மீது ஆபாசத் தாக்குதல் நடத்திய இரண்டுபேரை ஒரே நாளில் கைது செய்துள்ளார்கள்.

திவ்ய பாரதி பெண் இல்லை போல. அவர் கக்கூஸ் படம் எடுத்திருக்கக்கூடாது மாறாக விஜயை கிண்டல் செய்து ட்வீட் செய்திருக்க வேண்டும். தவறு செய்துவிட்டார் திவ்ய பாரதி.