மீனாட்சி சுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் என்கிற விசு, 1941ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிறந்தார்.
கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்ற தொடங்கிய அவர் , பட்டின பிரவேசம் என்ற படத்தில் கதாசிரியராக வேலை செய்தார். முதல்முதலாக கண்மணி பூங்கா என்ற படத்தை இயக்கினார்.
திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் மிகவும் பிரபலமானதாகும். பெரும்பாலான இந்திய மொழிகளில் இந்தப்படம் ரீமேக் செய்யப்பட்டது.
சன் டிவியில் விசுவின் அரட்டை அரங்கம், ஜெயா டிவியில் மக்கள் அரங்கம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தி சாமானிய மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றவர்.
கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், கடந்த சில காலமாக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.
இறுதிச்சடங்கு எப்போது நடைபெறும் என்பது குறித்து அவரது குடும்பத்தினர் தரப்பில் விரைவில் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.