சென்னை: தமிழ்நாட்டில் ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், 10, 11, 12ம் வகுப்பு மாணாக்கர் களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும், மற்ற வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு 31ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில்,கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில்  தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 31-1-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி,

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலம் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு வகுப்புகள் நடைபெறும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 க்கு வழக்கம்போல நேரடி வகுப்புகள் தொடரும்.

பொதுத்தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் கல்லூரிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 31-ம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு வரும் ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் கடந்த 5-ஆம் தேதி மருத்துவம் தவிர, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20-ஆம் தேதி வரை விடுமுறை என அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.