நெல்லை: மாற்றத்துக்கு தமிழகம் தயாராக உள்ளதாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் 3வது கட்டமாக 3 நாள் பிரசாரத்தை தென் மாவட்டங்களில் தொடங்கினார். அதற்காக விமானம் மூலம் அவர் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு நேற்று வந்தார்.
அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நேற்று தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி, முத்தையாபுரம், முக்காணி, சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தார். பின்னர் நாங்குநேரி அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து இன்று பாளையங்கோட்டையில் உள்ள செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பேராசிரியர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் நெல்லை டவுன் பகுதியில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் தரிசனம் செய்தார்.
இது குறித்து டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது: நெல்லையப்பர் கோயிலில் சாமி கும்பிட்ட போது, கடவுளின் அருள் எனக்கு கிடைத்தது போன்று உணர்ந்தேன். நம்பிக்கை என்பது பல சாதகமான மாற்றங்களை கொண்டு வரக்கூடியது. தமிழகம் ஒரு மாற்றத்துக்கு தயாராக உள்ளதாக நம்புகிறேன் என்று கூறினார்.