சென்னை: தமிழக அரசியல் வரலாற்றை மாற்றியமைத்த இடங்களுள் மிக முக்கியமானது சென்னை ராயபுரத்திலுள்ள அறிஞர் அண்ணா பூங்கா. ஆனால், இன்று அந்தப் பூங்கா சரியான பராமரிப்பின்றி, தனது பசுமையை இழந்து மோசமான நிலையில் காட்சியளிக்கிறது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 1949ம் ஆண்டு, இந்தப் பூங்காவில்தான் திமுக என்ற கட்சியின் உதயத்தை அறிவித்தார் அறிஞர் அண்ணா. அப்போது மழைக் கொட்டிக் கொண்டிருந்தது. இந்தப் பூங்கா, முன்பு ராபின்சன் பூங்கா என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர், அறிஞர் அண்ணா பூங்கா என்று பெயர் மாற்றம் பெற்றது.

இந்தப் பூங்கா சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. ஆனால், கடந்த பல்லாண்டுகளாக முறையான பராமரிப்பின்றி விடப்பட்ட இந்தப் பூங்காவின் உபகரணங்கள் பல உடைந்து, அப்பூங்காவின் பசுமை மறைந்துபோய், பார்க்கவே பரிதாபமாய் காட்சியளிக்கிறது.

வடசென்னைப் பகுதியின் பூங்காக்களில் மிகப் பெரியது இந்தப் பூங்கா. இதன் மொத்தப் பரப்பளவு 6 ஏக்கர்கள். ஆனால், சென்னை மாநகரின் தெற்குப் பகுதியில் இருக்கும் பல பூங்காக்களோடு ஒப்பிடுகையில், இங்கே பல வசதி குறைவுகள் உள்ளன.

வடசென்னைப் பகுதியில் அரசு இயந்திரம் எந்தளவில் செயல்படுகிறது என்பதற்கு, இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிஞர் அண்ணா பூங்காவே சாட்சியமளிக்கிறது என்று அந்தப் பகுதிவாசிகள் ஆதங்கத்தோடு தெரிவிக்கின்றனர்.

– மதுரை மாயாண்டி