
போபால்: காவி பயங்கரவாதம் என்ற பதத்தை உருவாக்கியதே பாரதீய ஜனதா கட்சிதான் என்றும், சாத்வி பிரக்யாவை தோற்கடிப்பது தனக்கான தனிப்பட்ட சவால் என்றும் கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய பிரதேச முதல்வருமான திக்விஜய் சிங்.
தற்போது மத்தியப் பிரதேச மாநில போபால் மக்களவைத் தொகுதியில், பாரதீய ஜனதாவின் சாத்வி பிரக்யாவை எதிர்த்துப் போட்டியிடும் திக்விஜய் சிங் கூறியுள்ளதாவது, “கடந்த 30 ஆண்டுகளாக இந்த போபால் தொகுதி, பாரதீய ஜனதாவின் கையில் இருந்தும், ஒரு பெங்களூரைப் போலவோ, ஐதராபாத்தைப் போலவோ அல்லது புனேவைப் போலவோ முன்னேறவில்லை. இதற்காக அக்கட்சியினர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
காங்கிரஸ் தலைவர்களை எடுத்துக்கொண்டால், மகாத்மா காந்தியிலிருந்து, இன்றைய தலைவர்கள் வரை, யாருமே மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்தியதே இல்லை. மதம் மற்றும் அரசியல் இரண்டுமே வெவ்வேறானவை.
காவி பயங்கரவாதம் என்ற பதத்தை உருவாக்கிய முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் ஆர்கே சிங்கை அரசியலுக்கு கொண்டுவந்து அவரை அமைச்சராகவும் ஆக்கியுள்ளது பாரதீய ஜனதா. மராட்டிய மாநிலத்தில் காவல் துறை ஆணையராக இருந்த சத்யபால் சிங் என்பவராலும் இந்தப் பதம் பயன்படுத்தப்பட்டது.
அவரையும் அரசியலுக்கு இழுத்துவந்து அமைச்சராக்கியுள்ளது அக்கட்சி. இதிலிருந்தே நீங்கள் உண்மையைப் புரிந்து கொள்ளலாம். மத்தியப் பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது பாரதீய ஜனதா. இந்த போபால் தொகுதியைப் பொறுத்தவரை கடந்த 30 ஆண்டுகளாக அக்கட்சிதான் வென்று வருகிறது.
எனவே, இந்தமுறை பாரதீய ஜனதா சார்பில் நிறுத்தப்பட்டுள்ள சாத்வி பிரக்யாவை வெல்வதை தனிப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்டுள்ளேன்” என்றார்.
[youtube-feed feed=1]