பெங்களூரு,

சிகலா சிறைக்குள் வாழ்ந்து வந்த சொகுசு வாழ்க்கை குறித்து, ரூபா ஊடகங்களுக்கு பேச தடை விதிக்க வேண்டும் என்று சசிகலா, டிடிவி தினகரன் தீவிர ஆதரவாளரும், கர்நாடக மாநில அதிமுக செயலாளருமான புகழேந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறை அதிகாரி களுக்கு கோடி கணக்கில் பணம் கொடுத்து, சொகுசாக சிறையில் வாழ்ந்து வந்தது, டிஐஜி ரூபாவின் அதிரடி ஆய்வின்போது தெரிய வந்தது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பிரச்சினையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகிர் தகவல்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார் டிஐஜி ரூபா.

சசிகலா, அங்கு சகல வசதிகளுடன் இருந்ததாக கூறி,  சில வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் பரவின.

இதையடுத்து சிறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டனர். டிஐஜி ரூபா, போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டார்.

இருந்தாலும், சிறை விதி மீறல் குறித்து அவ்வப்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்தும், அதுகுறித்த ஆவணங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இதன் காரணமாக சசிகலா டில்லி திகார் சிறைக்கு மாற்றப்படுவார் என்றும் பேச்சு எழுந்துள்ளது.

இது சசிகலா தரப்பினருக்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பணத்தால், சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த சசிகலா மீது அனைத்து தரப்பினரும் கடும் கோபத்தில் உள்ள நிலையில்,    இது சசிகலா தரப்பினருக்கும் மன உளைச்சலையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக, அதிமுக தொண்டர்களிடையே தனக்கு மேலும் செல்வாக்கு குறைந்துவிடும் என்று பயப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,  நேற்று கர்நாடக அ.தி.மு.க தலைவர் புகழேந்தி, அதிமுக அம்மா கட்சியின் சார்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த மனுவில்,    “ரூபா தனது விளம்பரத்துக்காகத் தொடர்ந்து ஊடகங்களுக்குப் பேசி வருகிறார். அவ்வாறு பேசுவதை அவர் நிறுத்த வேண்டும்.

அவர், சசிகலாகுறித்து ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பதைத் தடை செய்ய வேண்டும்.

அதையும் மீறி தொடர்ந்து பேசிவந்தால், அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே சசிகலாவுக்குதேவையான உதவிகளை பெங்களூரை சேர்ந்த புகழேந்தி மற்றும் ஓசூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவும் சிறை அதிகாரிகள் வாயிலாக செய்து வந்ததாக டிஐஜி ரூபா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.