தி.மு.க.வுடனான நீண்ட பிணக்குக்குப் பிறகு, அக் கட்சித் தலைவர் கருணாநிதியின் உடல் நலன் விசாரிக்கச் சென்றார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. அதோடு… முரசொலி விழாவுக்கு அவரை மு.க. ஸ்டாலின் அழைக்க… வைகோவும் ஒப்புக்கொண்டார்.

இரு கட்சியினரும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த அந்தக் காட்சியும் அரங்கேறியது.

சென்னை கொட்டிவாக்கத்தில் நடந்த முரசொலி பவளவிழா மேடையில் ஏறினார் வைகோ. பதினோரு ஆண்டுகள் கழித்து, தி.மு.க. மேடையில் பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இரு கட்சி தொண்டர்களுக்கும் இருந்தது.

ஆனால், வைகோவின் பேச்சு தி.மு.க தொண்டர்கள் உற்சாகப்படுத்தவில்லை.

அவர்கள் தெரிவிப்பது இதுதான்:

“மேடையில் வைகோ நடந்துகொண்ட முறைதான் எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திவிட்டது” என்கிறார்கள் இவர்கள்.

மேலும், “மேடை ஏறிய வைகோ, தான் கொண்டு வந்த சால்வையை போடுவதற்கு எடுக்க, தனக்குத்தான் போடுவார் என தளபதி (ஸ்டாலின்), அதை ஏற்க தயாரானார். ஆனால்,  சற்றும் எதிர்பாராத வகையில்  பேராசிரியர் அன்பழகனுக்கு முதல் மரியாதை செய்தார் வைகோ. பிறகு  தளபதிக்கு சால்வை அணிவித்தார். அது பரவாயில்லை… பேராசிரியர்தான் மூத்தவர்.

மேடையில் பேசியபோது ஒரு முறைகூட “தளபதி” என்ற வார்த்தையை வைகோ பயன்படுத்தவில்லை. மேடையில் பேசியவர்களில் இப்படி தளபதி என அழைக்காதவர் வைகோ மட்டுமே.

தவிர, தளபதியுடனான அரசியல் சம்பவங்களைப் பற்றி எதுவும் பேசவில்லை. தனது ‘சீனியாரிட்டி’யை நிருபிக்கும் வகையில் ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம் என ‘சீனியர்’களுடன் தனக்கான அனுபவத்தையும், கலைஞர் தன் மீது காட்டிய அன்பையும் மட்டுமே குறிப்பிட்டார்.

எமர்ஜென்சி காலத்தில் கருணாநிதி மற்றும் முரசொலியின் செயல்பாடுகளை விவரித்தார் வைகோ. அப்போது யாருமே எதிர்பாராத வகையில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். அதாவது,  சென்னை அண்ணா சாலையில் கருணாநிதி எமர்ஜென்சிக்கு எதிராக துண்டு பிரசாரம் கொடுக்க மு.க. அழகிரி உதவினார் என்பதுதான் அது. இந்த நிகழ்வை இருமுறை அவரது பெயரை உச்சரித்தார்.
மு.க. அழகிரி, தி.மு.கவில் இருந்து நீக்கிவைக்கப்பட்டிருக்கிறார். அவரது பெயரை இங்கே குறிப்பிட வேண்டியது இல்லை. ஆனால் வைகோ இரு முறை குறிப்பிட்டார்.

இதையடுத்து எமர்ஜென்சி காலத்தில் சிறையில் தாக்கப்பட்டு உயிரிழந்த சிட்டிபாபு குறித்து வைகோ பேசினார். சிட்டி பாபு மரணம் தொடர்பாக முரசொலி மாறன் தமக்கு கடிதம் எழுதியதையும் முரசொலியில் கருணாநிதி எழுதியதையும் விவரித்தார் வைகோ. இதையடுத்து தற்போதைய அரசியலுக்கு தாவிவிட்டார்.

இந்த பேச்சுத்தான் எங்களை (திமுக தொண்டர்களை) மிகவும் வருத்தப்பட வைத்துவிட்டது.
எமர்ஜென்சி காலத்தில் சென்னை மத்திய சிறையில் மு.க.ஸ்டாலின் அடைக்கப்பட்டிருந்தார். அவர் குண்டாந்தடிகளால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
அவர் மீது தாக்குதல்கள் விழாத வகையில் சிட்டிபாபுதான் அத்தனை அடிகளையும் தாங்கினார். அதனாலேயே அவர் மாண்டு போனார் என்பது வரலாறு. இது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் கவனத்துடன் இந்த சம்பவத்தில் தளபதியின் பெயரை இருட்டடிப்பு செய்துவிட்டார் வைகோ.

இதனால்தான் வைகோ பேசி முடித்தபோது பலர் கைதட்டவில்லை. குறிப்பாக முன்வரிசையில் அமர்ந்திருந்த திமுக நிர்வாகிகள் யாரும் கைதட்டாமல் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்” என்கிறார்கள் தி.மு.க.வினர்.

ஆனால் ம.தி.மு.க.வினரின் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது.

“வைகோ, மடைதிறந்த வெள்ளம்போல் பேசுபவர். அவருக்கும் வெறும் பதினைந்து நிமிடங்களே பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதை வைகோ மறைமுகமாக தனது பேச்சிலேயே தெரிவித்தார்.
தனக்கு 15 நிமிடம் கொடுக்கப்பட்டதைப் பற்றி குறிப்பிட்டதோடு, கோவையில் நடந்த மாநாட்டில் முரசொலி மாறனுக்கு 15 நிமிடம் கொடுத்தது குறித்து, குறிப்பிட்டு, அவரது நேரம் முடிந்தபோது, எரிய வேண்டிய சிவப்பு விளக்கிற்கு துணி போட்டு மறைத்து அவரைப் பேசச்சொன்னார்கள் என்று குறிப்பிட்டார். அதன் பிறகாவது, தனக்கான நேரத்தை நீட்டிக்கச் சொல்வார் என்று எதிர்பார்த்தார் வைகோ. ஆனால், அதுவும் நடக்கவில்லை.  ஆகவே பல தான் பேச நினைத்து வந்த பல விசயங்களை அவர் பேச முடியாமல் போனது. மற்றபடி எந்த மேடையிலும் எவரையும் தாழ்த்த வேண்டும் என வைகோ நினைத்ததே இல்லை” என்கிறார்கள் மதிமுகவினர்.