ஹவேரி, கர்நாடகா
கடந்த 1999 ஆம் வருடம் பயங்கரவாதி மசூத் அசாரை அப்போதைய பாஜக அரசு விடுதலை செய்ததை பிரதமர் மோடி ஏன் தெரிவிப்பதில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வினா எழுப்பி உள்ளார்.
கடந்த மாதம் 14 ஆம் தேதி நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுக் கொண்டது. இந்த இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் தற்போது பாகிஸ்தானில் வசித்து வருகிறான். உடல் நலம் குன்றியதால் மசூதுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் அமைச்சர் அறிவித்துள்ளார்.
நேற்று கர்நாடக மாநில் ஹவேரியில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் தேர்தல் பேரணி நடைபெற்றது. லட்சக்கணக்கில் மக்கள் திரண்டிருந்த இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொண்டு உரையாற்றினார். ராகுல் தனது உரையில், “கடந்த சில வருடங்களாகவே ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் இந்தியாவில் தொடர்ந்து பயங்கரவாத செயல்களை நிகழ்த்தி வருகிறது
கடந்த 2001 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி நடந்த பாராளுமன்ற தாக்குதல், மற்றும் 2016 ஆம் வருடம் நடந்த பதான் கோட் ராணுவத்தினர் மீது நடந்த தாக்குதல் உள்ளிட்ட பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இதை முன்னின்று நடத்தியவன் அந்த இயக்கத்தின் தலைவன் மசூத் அசார். அவன் இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதி ஆவான்.
கடந்த 1999 ஆம் வருடம் நடந்த கந்தகார் விமான கடத்தலின் போது விமானத்தையும் பயனிகளையும் விடுவிக்க ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாதிகள் மசூத் அசாரை விடுதலை செய்ய வேண்டும் என கூறினார்கள். அப்போதைய பாஜக அரசு அவனை விடுதலை செய்து விமானத்தையும் பயணிகளையும் மீட்டது.
அதன் பிறகு அவன் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறான். சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதல் வரை பல தாக்குதல்களை நடத்திய ஜெய்ஷ் ஈ முகமது தலைவன் மசூத் அசாரை பாஜக அரசுதான் விடுதலை செய்தது என ஏன் பிரதமர் தனது கூட்டங்களில் பேசுவதில்லை? அத்துடன் சமீபத்தில் நடந்த விமானப்படை தாக்குதல் விவரங்களை பிரதமர் மோடி ஏன் வெளியிடவில்லை?” என சரமாரியாக கேள்விகள் எழுப்பி உள்ளார்.