திருவனந்தபுரம்

ட்டப்பேரவை தேர்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை மறைத்து வாக்களித்ததாகச் சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த 6 ஆம் தேதி அன்று கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது.   தேர்தல் நாள் அன்று முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனது.  அன்று மாலை அவர் கவச உடையில் வந்து வாக்களித்தார்.  அதன் பிறகு முதல்வர் மனைவி கமலா, வீணாவி்ன் கணவர் நியாஸ், மற்றும் வீணாவின் மகன் இஷான் ஆகியோருக்கு தொற்று உறுதி ஆனது.

முதல்வர் பினராயி விஜயனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக 8 ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது.   அன்றே அவர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.  நேற்று அவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா நெகடிவ் என முடிவு வந்தது.  அவர் நேற்று வீட்டுக்கு அனுப்பப்பட்டு ஒரு வாரம் வீட்டில் ஓய்வு எடுப்பார் என அறிவிக்கப்பட்டது.

கொரோனா பாதித்த 10 நாட்களுக்குப் பிறகு பரிசோதனை நடத்துவது வழக்கமாகும்.   ஆனால் பினராயி விஜயனுக்கு 8 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் நேற்றே அதாவது 7 ஆம் நாளே பரிசோதனை நடத்தி நெகடிவ் என அறிவ்க்கபட்டுள்ளது.  ஆகவே அவருக்கு 6 ஆம் தேதிக்கு முன்பே கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் அதை மறைத்து 6 ஆம் தேதி வாக்களித்துள்ளதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.