பாட்னா
பீகார் ஆசிரியர் தேர்வில் ‘பிரேமம்’ திரைப்பட கதாநாயகி பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் தேர்ச்சி பெற்றுள்ளதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2019 ஆம் வருடம் பீகார் மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது. ஏராளமானோர் எழுதிய அந்த தேர்வின் முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியானது. ஆனால் அதில் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் இருந்தன. எனவே மதிப்பெண்கள் வெளியிடப்படவில்லை.
தற்போது அவை சரி செய்யப்பட்டு விட்டதாக அரசு அறிவித்தது. அதையொட்டி அரசு இணைய தளத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியானது. இதில் பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரனின் படத்துடன் கூடிய சான்றிதழ் வெளியாகிப் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
பிரேமம் என்னும் படத்தில் 3 கதாநாயகிகளில் ஒருவராக நடித்த அனுபமா தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். சான்றிதழில் அவருடைய பெயர் ரிஷிகேஷ் எனவும் அவர் உருது, சமஸ்கிருதம், அறிவியல் பாடங்களில் தேர்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ரிஷிகேஷுக்கு பதிலாக அனுபமாவின் புகைப்படம் தவறுதலாக இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் பீகாரில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டதாக தெரிவித்தும் சான்றிதழில் நடிகை படம் இடம் பெற்றுள்ளது எதிர்க்கட்சிகளுக்கு அதிருப்தியை அளித்துள்ளது. பீகாரில் அனைத்திலும் மோசடி அல்லது குளறுபடி உள்ளதாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.