திருவனந்தபுரம்

பிரபல மலையாளம் மற்றும் இந்தி திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தையுமான சிவசங்கரன் மரணம் அடைந்துள்ளார்.

கேரளாவில் ஆலப்புழை அருகே உள்ள ஹரிப்பாடு பகுதியை சேர்ந்த சிவசங்கரன் நாயர் கேரள அரசில் முதல் புகைப்பட கலைஞராகப் பணி புரிந்தார்.  இவர மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட பல தலைவர்களைப் புகைப்படம் எடுத்துள்ளார்.  அதன் பிறகு திரையுலகில் புகைப்படக் கலைஞராக நுழைந்து ஒளிப்பதிவாளர் ஆனார்.

இவர் ஏராளமான மலையாளம் மற்றும் இந்தி படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணி புரிந்துள்ளார். தவிர சொப்னம், அபயம், யாகம், கீழிவாதில், கேசு உள்ளிட்ட பல மலையாள படங்களை இயக்கி உள்ளர்.  3 முறை இவர் தேசிய விருதினை பெற்றுள்ளார்.  இவருடைய 3 மகன்களும் பிரபல ஒளிப்பதிவாளர்களாக உள்ளனர்.

அவர்கள் சங்கீத் சிவன், சந்தோஷ் சிவன் மற்றும் சஞ்சீவ் சிவன் ஆவார்கள் மூவரும் தமிழ், இந்தி எனப் பல மொழிகளில் ஒளிப்பதிவாளர்களாக உள்ளனர்.  இவர்களில் சந்தோஷ் சிவன் திரைப்பட இயக்குநரும் ஆவார். 

தற்போது 89 வயதாகும் சிவசங்கரன் வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.  நேற்று அதிகாலையில் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.   சிவசங்கரனின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.  அவரது மறைவுக்கு திரையுலக பிரமுகர்கள், கேரள முதல்வர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.