டில்லி
சமீபத்தில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வில் தோனியின் விளையாட்டு தற்போது எதிர்பார்த்த அளவு இல்லை எனவும், இது தொடர்ந்தால் அவர் நீக்கப்படுவார் எனவும் தேர்வாளர் எம் எஸ் கே பிரசாத் தெரிவித்திருந்தார். அதற்கு தோனியின் ரசிகர்கள் இணையத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு பற்றி விவாதிக்க ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் கலந்துக் கொண்ட தேர்வாளர் எம் எஸ் கே பிரசாத் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ”தோனியின் விளையாட்டு சமீப காலமாக சரியாக இல்லை. எனவே அவர் தன் விளையாட்டை மேம்படுத்திக் கொள்ளவில்லை எனில் எங்களுக்கு அவருக்கு பதில் வேறொருவரை தேர்ந்தெடுப்பதை தவிர வேறு வழி இல்லை. நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் தோனி 114 பந்துக்களில் 54 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். விராட் கோலியின் சிபாரிசினால் தான் அவர் இன்னும் தொடர்கிறார். எங்களுக்கு இந்திய அணி வெற்றி பெறுவதுதான் முக்கியம்” எனக் கூறினார்.
இது தோனியின் ரசிகர்களின் கோபத்தை தூண்டி விட்டுள்ளது. பலர் இதை எதிர்த்து இணையத்தின் பதிந்து வருகின்றனர். அவற்றில், “தோனியை குற்றம் சொல்ல நீங்கள் யார்? அவர் இன்னும் நல்ல ஃபார்மில் தான் இருக்கிறார், அவர் விளையாடவில்லை எனில் இந்தியாவுக்கு எதிர்காலம் இல்லை. அப்படி இருக்க அவர் எதிர்காலத்தை பற்றி பிரசாத் கருத்து தெரிவிப்பது நகைப்புக்குரியது” என்பது போல் பலரும் தங்கள் கண்டனத்தை பிரசாத்துக்கு தெரிவித்துள்ளனர்.