ஆண்டிகுவா: மகேந்திரசிங் தோனி, கிரிக்கெட்டில் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் மற்றும் அணுகுவதற்கு மிகவும் எளிதானவர் என்று புகழ்ந்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளவருமான டுவைன் பிராவோ.

ஜம்பாப்வே அணி வீரர் பொம்மி மாங்க்வாவுடன் இன்ஸ்டாகிராம் லைவ் நிகழ்ச்சியில் பேசும்போது இதை தெரிவித்தார் பிராவோ.

அவர் கூறியதாவது, “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினுடைய வெற்றிக்கான மிகப்பெரிய காரணம் தோனியும் ஃபிளெமிங்கும்தான். அணியின் முதலாளிகள் அவர்களை முற்றிலும் நம்புவதால், முடிவெடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை மற்றும் மூன்றாம் நபர் தலையீடும் தேவையிருப்பதில்லை.

கிரிக்கெட் மற்றும் எங்கள் அணியில், தோனிதான் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். அவருடன் மிக எளிதில் கலந்துரையாட முடியும். அவருக்கு வீடியோ கேம்கள் என்றால் பிரியம். அவருடைய வீட்டுக் கதவுகள் எந்நேரமும் யாருக்கும் திறந்திருக்கும்.

கிரிக்கெட்டின் பெரிய சூப்பர் ஸ்டார்களைப் பற்றி நாம் சிந்தித்தால், தோனி, அவர்கள் அனைவரிலும் பணிவான ஒரு மனிதர். சிஎஸ்கே என்பது விசுவாசமான பல ரசிகர்களைக் கொண்ட ஒரு சிறப்புவாய்ந்த அணி” என்றார் பிராவோ.