டில்லி

நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது நாடாளுமன்றத்துக்கு வராத நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது.  இந்த முக்கியமான நேரத்தில் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் அவைக்கு வரவில்லை.  மாறாக அவர் இந்தியா டுடே பத்திரிகை நடத்திய நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.  இது எதிர்க்கட்சியினருக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது.

இது குறித்து திமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தயாநிதி மாறன் மக்களவையில்,

”நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடக்கும்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இல்லை  என்பது நாடாளுமன்ற  உறுப்பினர்களை அவமதிக்கும் செயலாகும்.  அப்போது  மக்களவையில் இருக்க வேண்டிய நிதியமைச்சர், அதற்கு பதிலாக இந்தியா டூடே நடத்தும் நிகழ்வில் பங்கேற்று இருக்கிறார்.

அவர் நியமன உறுப்பினராக இருப்பதே இதற்கு முக்கிய காரணம், ஆகும், அதனால் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய மக்களவைக்கு மதிப்பு தரவில்லை.  மேலும் நிதி அமைச்சர் தன் உரையின்போது வரி செலுத்தும் மக்களுக்கு நன்றி கூறினார். அதற்கு  நான் வரிச்செலுத்துபவர்களுக்கு எந்த வரி மாற்றத்தையும் செய்ய மாட்டேன் என்பதே அர்த்தம் ஆகும் .

அதாவது அவர் கொரோனா காலத்திலும் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆனால் நீங்கள் வரியை மட்டும் செலுத்துங்கள் எனத் தெரிவித்துள்ளார்.  நடுத்தர மக்களுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகள் மிக மோசமானதாக இருந்தது..  இந்த அரசால் அவர்களுக்கு எந்த பலனுமே கிடைக்கவில்லை.  அரசு தரப்பினர் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே வழங்கினார்கள்.”

என உரையாற்றி உள்ளார்.