சென்னை
தனது தாய் மற்றும் சிறுமி ஹாசினியைக் கொன்றதாக கூறப்படும் தஷ்வந்தின் கூட்டாளி மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்ற பிப்ரவரி மாதம் ஆறு வயது சிறுமி ஹாசினி பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சென்னையைச் சேர்ந்த அந்தச் சிறுமியின் கொலையாளியான தஷ்வந்த் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு அவர் அந்த சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் வந்த தஷ்வந்த் தனது தாய் சரளாவைக் கொன்று விட்டு நகைகளுடன் ஓடி விட்டார்.
அதன் பின் மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்த் போலீசாரால் கடும் தேடுதலுக்குப் பின் கைது செய்யப்பட்டார். விமான நிலையம் செல்லும் வழியில் மீண்டும் தப்பி ஓடிய தஷ்வந்தை தேடிப் பிடித்து போலீசார் மீண்டும் கைது செய்தனர். தற்போது தஷ்வந்த் சென்னை புழல் சிறையில் காவலில் உள்ளார்.
தஷ்வந்த் தனது தாயின் நகைகளை சிறையில் தனக்கு பழக்கமான மணிகண்டன் என்பவரிடம் கொடுத்ததாகவும் ஆனால் மிகக் குறைந்த பணத்தை கொடுத்து விட்டு மணிகண்டன் எங்கோ ஓடி ஒளிந்துக் கொண்டதாகவும் தஷ்வந்த் தெரிவித்துள்ளார். இன்று மணிகண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் அவரிடம் கடும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.