திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது இளம்பெண் மரணம் அடைந்தார். இதற்கு காரணமான செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் சல்மாபேகம் தலைமையில் இளம்பெண்ணின்  உறவினர்கள் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர் அடுத்த ஆரிப்நகர் பகுதியை சேர்ந்தவர் இம்ரான். இவரது மனைவி பரிதா. கர்ப்பிணி யான இவர், சம்பவத்தின்போது, பிரசவத்திற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள், மருத்துவரிடம் போன் மூலம் தகவல் கேட்டு பிரசவம் பார்த்துள்ளனர். சரியான முறையில் பிரசவம் பார்க்காத நிலையில், பிரசவத்தின்போத கர்ப்பிணி பெண் மரணம் அடைந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கர்ப்பிணியின் உறவினர்கள், இறந்தவர் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். தவறாக சிகிச்சை அளித்த செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

ஆனால், மருத்துவமனை நிர்வாகமும், காவல்துறையினரும், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியும், இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா தலைமையில் இறந்த கர்ப்பிணியின் உறவினர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன்  கந்திலி ஒன்றியம் காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் மத்தின் பாஷா, சிறுபான்மை துறை  உறுப்பினர்கள் மற்றும் இறந்த பெண்ணின் உறவினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.நிலோபர் கபில் கார் முன் அமர்ந்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‌இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களிடம் அமைச்சரும், மாவட்ட கலெக்டரும் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.