சென்னை: தமிழக சட்டமன்றப்பேரவையின் ஆயுட்காலம் மே 24ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவிக்கிறார்.
முன்னதாக தமிழகத்தின் தேர்தல் பார்வையாளராக தர்மேந்திரகுமார் நியமிக்கப்படுவதாக கூறினார்.
மேலும் தேர்தல் செலவின பார்வையாளர்களாக மதுமஹான், ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் பாலகிருஷ்ணா நியமிக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
ஐஆர்எஸ் அதிகாரி பாலகிருஷ்ணா, குட்கா முறைகேடு, ஆர்.கே.நகர் தேர்தல் லஞ்சம் தொடர்பான முறைகேடுகளை கண்டுபிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காலம் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் தேர்தல் நடத்துவதாக கூறியவர், தேர்தலை சுமூகமாக நடத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருவதாகவும் கூறினார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும், தேர்தல் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் கடந்த தேர்தலின்போது 66ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது மொத்தம் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இது கடந்த தேர்தலை விட 34.73 சதவிகிதம் அதிகம். ஒரு வாக்குச்சாவடியில் அதிகப்பட்சமாக 1000 வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். வாக்களிக்கும் நேரம் ஒருமணி நேரம் அதிகரிக்கப்படுகிறது என்றார்.
மேலும், தேர்தல் பாதுகாப்புக்கு மாநில காவல்துறையுடன், சிஆர்பிஎஃப் காவல்துறையினரும் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்றார்.
வீடு வீடாக சென்று 5 பேர் மட்டுமே வாக்கு சேகரிக்க வேண்டும் என்று கூறியவர், ஊனமுற்றோர்களுக்காக சக்கர நாற்காலிகள், சாய்வு தளம் போன்ற வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.