தர்மபுரி:

ர்மபுரியில் வசித்து வரும் மக்கள் இனி வாரத்தில் 2 நாள் மட்டுமே வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 23 வயது பெண் சென்னையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவருக்கு கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது. இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி சுகாதாரத்துறையினர் அவரை தனிமைப்படுத்தி தர்மபுரி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதேபோல் தர்மபுரி மாவட்டம் துரிஞ்சிப்பட்டி பகுதியை சேர்ந்த 29 வயது நபர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு சென்னையிலேயே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அவர் சென்னையிலேயே சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் மற்றும் கோயம்பேடு சென்று திரும்பிய 3 காய்கறி வியாபாரிகள் என 4 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் தற்போது மேலும் 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, ஊரடங்கு அமலில் உள்ள வரை,  தர்மபுரியில் வசிக்கும் பொதுமக்கள் இனி வாரம் 2 நாட்கள் மட்டுமே கடைகளுக்கு வெளியே அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மேலும் இதற்காக பொதுமக்களுக்கு மஞ்சள், பச்சை, ஆரஞ்சு கலர்களில் வார்டு வாரியாக நகராட்சி சார்பில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.