ராஞ்சனா, ஷமிதாப் படங்களைத் தொடர்ந்து அத்ராங்கி ரே எனும் இந்திப் படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ்.

அத்ராங்கி ரே ரிலீசுக்கு தயாராகி வருகிறது, இந்தப் படத்தில் சாரா அலி கான், அக்ஷய் குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

அடுத்தடுத்து இந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவரும் நடிகர் தனுஷிடம் நீங்கள் தமிழ் திரையுலகில் இருந்து பாலிவுட்டுக்கு தாவ முயற்சி செய்கிறீர்களா ? என்று கேள்வியெழுப்பப் பட்டுள்ளது.

இதுகுறித்து ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பதிலளித்த தனுஷ், “எனக்கு ஏற்ற, எனக்குப் பிடித்த கதையம்சம் உள்ள எந்தப் படத்திலும் அது இந்தி மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம் ஏன் மராத்தி மொழியாக இருந்தாலும் நடிப்பதற்கு நான் தயார்.

ஆனால் எனது தாய்மொழி தமிழில் நடிப்பதைத் தான் என் மனம் விரும்புகிறது, தமிழ் படங்களில் தான் அதிகம் நடிக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், “மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் போது என்னை இந்தியாவைச் சேர்ந்த நடிகராகவே பார்க்கிறார்கள் தமிழ் நடிகர் என்று கூறுவதில்லை, அதுபோல் நானும் இந்திய படங்களில் நடிக்கும் இந்திய நடிகனாகவே இருக்க விரும்புகிறேன் தென்னிந்திய நடிகர் என்ற அடையாளத்தை தவிர்க்க முயற்சி செய்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார் தனுஷ்.

தனது 20 ஆண்டு கால திரையுலக பயணத்தில் இதுவரை 46 படங்களில் நடித்திருக்கும் தனுஷ் மூன்று இந்தி படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பதும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டு முறை (ஆடுகளம் 2011 – அசுரன் 2019) வாங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]