சென்னை: தேசிய ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்களிடம், காவல்துறையினர் அவமரியாதையாக நடந்து கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார் காவல்துறை இயக்குநர்(டிஜிபி) திரிபாதி.

ஊரடங்கு உத்தரவை சிலர் வேண்டுமென்றே மீறினாலும், பலர் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் வரவேண்டியுள்ளது. இந்தச் சூழலில், அவர்கள் கண்காணிப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினரிடம் சிக்கிக்கொள்ள வேண்டியுள்ளது.

காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்து பல புகார்கள் எழுந்து, முதல்வர் பழனிச்சாமியும்கூட, அதுதொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.

இந்நிலையில், டிஜிபி திரிபாதி கூறியுள்ளதாவது, “ஊரடங்கை மீறுபவர்களை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் அவர்களை அவமரியாதையாக நடத்த வேண்டாம். தவிர்க்க முடியாத காரணங்களினாலேயே மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர்.

கொரோனா அபாயத்தை அவர்களுக்கு எடுத்துக்கூறி அனுப்புங்கள். பைக்குகளில் வருபவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். விசாரணையின்போது சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றுள்ளார்.