தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வேறு வழியின்றி துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாக தமிழ்நாடு  காவல் துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர்களை, விவிடி சிக்னல் அருகே காவல் துறையினர் தடுத்தனர். அப்போது, அவர்கள் காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்கினர்.

மேலும், பொதுமக்களின் சொத்துக்கள் மற்றும் காவல் துறை வாகனங்களுக்கு தீ வைத்தும், கல்வீசியும் சேதப்படுத்தினர். தொடர்ந்து காவல் துறையினரை தாக்கிவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி முன்னேறினர்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்ததுடன், அலுவலக நுழைவுவாயில் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை சேதப்படுத்தியும், ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே செல்ல முயன்றனர்.

கண்ணீர் புகை குண்டுகளை உபயோகித்தும், தடியடி பிரயோகம் செய்தும் அந்தக் கும்பல் கலைந்து செல்லாமல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வந்ததால், காவல் துறையினர் வேறு வழியின்றி துப்பாக்கி பிரயோகம் செய்ய நேரிட்டது.

மேலும் முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, போதுமான காவல் துறையினர் கூடுதல் பாதுகாப்புப் பணிகளுக்காக தூத்துக்குடி சென்றுள்ளனர். அதோடு  மேலும், காவல் துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” – இவ்வாறு  டி.கே.ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.