சென்னை: ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை என சூளுரைத்து சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற டிஜிபி அருண், சென்னையை உலுக்கியுள்ள நாட்டின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களுல் ஒன்றான  கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்காரம் விஷயத்தில், ரவுடிகளுக்கும், பாலியல் குற்றவாளிகளுக்கும் புரியும் வகையில் நடவடிக்கை எடுப்பாரா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

“போலீஸ் எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது. எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கூறி இருக்கிறார்” என அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் குறித்து சென்னை கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு பெருமையை சேர்த்து வரும்  சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், அங்கு படித்து வரும் மாணவி ஒருவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவரால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த கொடூர சம்பவம் டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற நிலையில், இரு நாட்கள் கழித்தே காவல்துறையில் அந்த மாணவி புகார் கொடுத்துள்ளார். அதாவது பாதிக்கப்பட்ட பெண், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை பதிவு செய்த காவல்துறையினர், டிசம்பர் 25ஆம் தேதி, இந்த வழக்கு தொடர்பாக திமுக பிரமுகர் என கூறப்படும்  ஞானசேகரன் என்ற நபர் கைது செய்யப்பட்டு அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.  கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரன், தமிழக அமைச்சர்கள் மற்றும் துணைமுதல்வர் உதயநிதியுடன் நெருக்கமான இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதை மறுத்த திமுக தலைமை மற்றும் அமைச்சர் கோவி செழியன், பின்னர், குற்றவாளி ஞானசேகரன் மீதான வழக்குகள் விவரம் வெளியான நிலையில்,  நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தனர்.

இதற்கிடையில், மாணவி கொடுத்த புகாரை பதிவு செய்த, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த எஃப்ஐஆர் ( முதல் தகவல் அறிக்கை (FIR)) திடீரென சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் பெண்ணுக்கு நடந்த அசம்பாவிதங்கள் பற்றிய விரிவான தகவல்கள் மட்டுமின்றி அந்தப் பெண்ணின் பெயர், அலைபேசி எண், படிக்கும் பாடப்பிரிவு, முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. சில தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்தப் பெண்ணின் தனிப்பட்ட விவரங்கள் தவிர்த்து, எந்தெந்தப் பிரிவுகளில் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அடங்கிய எஃப்.ஐ.ஆரை ஒளிபரப்பின.

புகார் குறித்த எஃப்ஐஆரை வெளியிடக்கூடாது என்றும், பாலியல் சம்பவத்தில்பாதிக்கப்பட்ட மாணவியின் புகைப்படம் உள்பட எந்தவொரு தகவலும் வெளியிடக்கூடாது என்ற நிலையில், அதை மீறி காவல்துறையின் எஃப்ஐஆர் வெளியானதும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து எஃப்ஐ ஆர் குறித்த தகவலை யாரும் பகிரக்கூடாது, ஊடகங்களில் வெளியிடக்கூடாது என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எஃப்ஐஆரை வெளியிட்டது யார் என கண்டுபிடித்து அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, அதை வெளியிடும் ஊடகங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை மிரட்டுவதும் கண்டிக்கத்தக்கது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காவல்துறையினரின் நடவடிக்கையை காரி துப்பிய நிலையில் எதிர்க்கட்சிகளும் சென்னை மாநகர காவல்துறையின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

இந்த  நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் தாக்குதலுக்கு ஆளான சம்பவத்தில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என  தெரிவித்துள்ளார்.  முதலில், இந்த பாலியல் விவகாரத்தில் இரண்டு பேர் உடந்தையாக இருந்தாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது விரிவாக பேசிய காவல் ஆணையர் அருண், “புகாரில் பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை அப்படியே பதிவு செய்வதுதான் FIR. வழக்குப்பதிவு செய்த 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் FIR எனும் முதல் தகவல் அறிக்கை, இணையதளத்தில் தானாகவே லாக் ஆகிதான் இருக்கும். பாதிக்கப் பட்டோரின் விபரங்களை பார்க்க முடியாது. ஆனால், IPC-யில் இருந்து புதிய சட்டங்களான BNS-க்கு மாற்றப்பட்டதால் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லாக் ஆவதில் சற்று தாமதம் ஆகியுள்ளது , இந்த நேரத்தில் சிலர் அதனை பதிவிறக்கம் செய்திருக்கலாம். மேலும், பாதிக்கப்பட்ட தரப்புக்கும் FIR நகல் கொடுக்கப்பட்டது. இந்த 2 இடங்களிலும் ஏதாவது ஒரு இடத்தில் FIR லீக் ஆகியிருக்கலாம். என ஒப்புக்கு சப்பானியாக பதில் தெரிவித்துள்ளார்.

FIR-ஐ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டல் விடுத்த டிஜிபி அருண்,  அண்ணா பல்கலை.யில் 70 சிசிடிவிக்கள் உள்ளன. 56 கேமராக்கள் வேலை செய்கின்றன. கைதான ஞானசேகரன் மீது திருட்டு உள்பட 20 வழக்குகள் உள்ளன. அவரால் வேறு யாரும் பாதிக்கப்பட்டதாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில்,  காவல்துறை எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது. எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆய்வுக் கூட்டங்களில் முதலமைச்சர் கூறியது. எங்களுக்கு எந்த கட்சி சார்பும் இல்லை என்று கூறிய டிஜிபி அருண், அண்ணா பல்கலை. வளாகத்தில் இன்னும் அங்கு பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடக்கிறது”. தற்போரது, அங்கு  140 பேர், 3 ஷிப்டுகளாக காவலாளிகள் பணியில் உள்ளனர். வளாகத்திற்கு 11 நுழைவு வாயில்கள் உள்ளன.  என்றார்.

சென்னையில் பட்டப்பகலில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம்தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீடு அருகே கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். தலைநகரிலேயே இந்த அசம்பாவிதம் நடைபெற்றதால் சட்டம் – ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திமுக கூட்டணி கட்சிகளும் விமர்சித்தன.

இதையடுத்து,  சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்ற கூடுதல் டிஜிபி அருண், ரவுடிகளை ஒழிக்க ரவுடிகளின் மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். சென்னை மாநகரத்தில் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட முன்னுரிமை அளிக்கப்படும். நடந்த குற்றங்களை கண்டுபிடிக்கவும், குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகளை கட்டுப்படுத்துவதே என் முதல் பணியாக இருக்கும். போலீஸார் கடமையை சரியாகசெய்தாலே, குற்றங்கள் குறையும்.

ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள். ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும். என்னை நம்பி இந்தபொறுப்பை ஒப்படைத்த முதல்வரின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன் என தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இரு குற்றவாளிகளை என்கவுண்டர் செய்து அதிரடியாக தன்னை வீராதி வீரராக காட்டிக்கொண்ட நிலையில், சென்னையில்  தலைவிரித்தாடும் கஞ்சா உள்பட போதை பொருள் விற்பனையை தடுக்க தவறியது மட்டுமின்று, ஆளும் கட்சிக்கு விசுவாசமாக,  அடுத்தடுத்து எதிர்க்கட்சியினரை கைது செய்வதிலும், அரசியல் விமர்சகர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மட்டுமே அவரது செயல்பாடு இருந்து வருகிறது.

இதனால், காவல்ஆணையர் அருண் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாக மாறி வரும் நிலையில், அவர்குறித்தும்  சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தற்போது நாட்டை உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக இளம்மாணவி விவகாரத்திலும், டிஜிபி அருண், ஏன் மவுனம் சாதிக்கிறார் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

குற்றவாளி ஞானசேகரன்  திமுக  ஆதரவாளர் என கூறப்படும் நிலையில்,  சாதாரண குற்றவாளி போல அவரது கை, காலை உடைத்ததாக கூறி, சொகுசு காரில் உட்கார வைத்து போட்டோ சூட் நடத்தி, அதை ஊடகங்களிடையே வெளியிட்ட காவல்துறையினர்,  மற்ற பாலியல் குற்றவாளிகளுக்கு பாடமைக அமையும் வகையில்,  இந்த கொடூர சரித்திர பதிவேடு  குற்றவாளியையும் என்கவுண்டர் செய்திருக்கலாமே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மாணவி பாலியல் விவகாரத்தை பெரும்பாலான ஊடகங்கள் மடை மாற்றி வந்தாலும் சமூக வலைதளங்களில் இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணா பல்கலை மாணவி பாலியல்  பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. டிசம்பர் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு காவல் கட்டுபாட்டு அறையை தொடர்பு கொண்டு மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. 24ம் தேதி பெண் காவல் ஆய்வாளர் பத்மா நேரில் சென்று மாணவியை சந்தித்து புகாரை பெற்றுள்ளார்.

ஞானசேகரனின் குற்றப்பின்னணியை அறிந்து சந்தேகத்தின் பேரில் பிடித்து 24ம் தேதியே போலீசார் விசாரணை செய்துள்ளனர். வீடு புகுந்து கொள்ளை அடிக்கும் போது அங்குள்ள பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வது ஞானசேகரனின் வழக்கம். போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் காவல் நிலையம் செல்லும் போது செல்போனில் ஆதாரங்களை அழித்துவிட்டு ஞானசேகரன் சென்றதாக கூறப்படுகிறது. விசாரணையின் போது தான் ஏதும் செய்யவில்லை என மறுத்ததால், அதனால், ஆதாரம் இல்லை என கூறி, எழுதி வாங்கி கொண்டு ஞானசேகரனை போலீசார் அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் மாணவி விவகாரத்தை அரசியல் கட்சிகள் பூதாகாரமாக்கியதால், சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர், அதன்பின்னர், அந்த பகுதி மற்றும் அருகே உள்ள மற்ற  CCTV காட்சிகள் , செல்போன் சிக்னல், ஞானசேரகன் அணிந்திருந்த ஆடைகள் போன்றவற்றின் மூலம் ஞானசேகரன் மீண்டும் சந்தேக வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டான். ஞானசேகரனின் செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வீடியோக்களை போலீசார் ரெகவரி செய்துள்ளனர். அறிவியல்பூர்வ ஆதாரங்கள் மூலம் ஞானசேகரன் தான் குற்றவாளி என்பதை உறுதி செய்து மீண்டும் பிடித்துள்ளனர் போலீசார்.

ஞானசேகரன் குடும்ப பின்னணி

ஞானசேகரன் அடையாறில் பிரியாணி கடை வைத்து நடத்துகிறாராம். நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் வரை வருமானம் சம்பாதிக்கும் அவர் பகலில் கடையிலும் இரவில் உல்லாச வாழ்க்கையிலும் ஈடுபட்டுள்ளார். காதலர்களை மிரட்டி பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதே இவருடைய கொடூர பாணியாக இருந்திருக்கிறது. இவருக்கு மொத்தம் நான்கு மனைவிகள். முதல் மனைவிக்கு பெண் குழந்தையும் இருக்கிறது. இருப்பினும் மனைவிகளுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்தால் அவர்கள் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் நான்காவது மனைவியுடன் வசிந்தது வந்ததாக தெரிகிறது. தினமும் இரவு தன்னுடைய சொகுசு கார் மூலம் சுற்றி பெண்களுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார் அவர். காதலர்களை பார்த்துவிட்டால் அவர்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்வதையும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இப்போது வசமாக சிக்கியிருக்கிறார்.

சென்னை காவல்துறை எச்சரிக்கை

இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இந்தியாவின் புகழ்பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவிக்கு நேர்ந்துள்ள கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே நடுங்க வைத்துள்ளது. பல்கலைக்கழகத்தின் உள்ளேயே வைத்து, பல்கலைக்கழகத்திற்கு தொடர்பே இல்லாத ஒரு நபர் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் நாட்டை உலுக்கியுள்ளது.