நாக்பூர்

காராஷ்டிரா மாநில கோவில்களில் உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது குறித்து பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர கோவில் கூட்டமைப்பு என்னும் அமைப்பு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள கோவில்களில் உடை கட்டுப்பாடு விதித்துள்ளது.  அதன்படி அனைத்து பக்தர்களும் அரை கால்சட்டை என அழைக்கப்படும் ஷார்ட்ஸ் போன்ற உடைகள், ஜீன்ஸ் போன்றவை  அணிந்து கோவிலுக்குள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  விரையில் இந்த நடைமுறை மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  இது குறித்து பக்தர்களில் ஒருவர், “அரை கால்சட்டை என அழைக்கப்படும் ஷார்ட்ஸ் போன்ற உடைகள் பொதுவாகப் பள்ளிச் சிறுவர்களால் அணியப்படுகிறது.  பல பள்ளிகளில் இது சீருடையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   மேலும் இக்காலத்தில் அனைத்து வயதினரும் இத்தகைய ஆடைகளை அணிவது வழக்கமாக உள்ளது.

அதைப் போல குட்டைப்பாவாடை அணிவதும் நமது கலாச்சாரத்தில் ஒன்றாக மாறி உள்ளது.  ஆனால் இதுவரை எந்த ஒரு வயது வந்த ஆண் அரை கால்சட்டை அணிந்தோ அல்லது பெண் குட்டைப்பாவாடை அணிந்தோ கோவிலுக்குள் செல்வதில்லை.  எனவே இது போன்ற கட்டுப்பாடுகள் தேவை அற்ற ஒன்றாகும்.  அதே வேளையில் இந்த கட்டுப்பாட்டினால் சிறுவர்கள் கோவிலுக்குச் செல்வது தடைப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.