திருவனந்தபுரம்: சபரிமலையில் ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. இதையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத அளவில் பக்தர்கள் குவிந்து வருவதால் பாதுகாப்பு கருதி காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், மண்டலபூஜை முடிவடைந்து, டிசம்பர் இறுதி முதல் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை பொன்னம்பல மேட்டில் வருகிற 14-ந் தேதி மகர ஜோதி தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. இதை காண நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினசரி 80 ஆயிரம் முதல் 1லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலை வந்து அய்யப்பன் அருளாசி பெற்று வருகின்றனர். இதனால், அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து அய்யப்பனை தரிசித்து செல்கின்றனர்.
இந்த நிலையில் மகரஜோதி தரிசன நாளில் மேலும் பல ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்து வருகிறது. அதன்படி பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் நெரிசலின்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பாதுகாப்பு பணிக்கு 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் சன்னிதானம் மற்றும் சபரிமலை முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
மகரவிளக்கு தினத்தன்று கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். இதனை சன்னிதான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் போலீஸ் சூப்பிரண்டு பிஜூமோன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெரிசலின்றி சன்னிதானம் செல்லவும், அங்கு 18-ம் படி ஏறவும் தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. இதற்காக நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானம் வரை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களை தவிர பேரிடர் மீட்பு படையினர், சுகாதார துறையினர், தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.