சென்னை: தென்மாவட்டங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 25ந்தேதி வரை தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு மாதம் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் போது விசேஷ பூசைகள் நடைபெறும். இதையொட்டி, அங்கு ஏராளமான  பொதுமக்கள் சென்று தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி, மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும் ஆனால், மழைக்காலங்களில், அங்குள்ள காட்டாற்று வெள்ளம் மற்றும் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்படும்.

இநத் நிலையில், தற்போது விருதுநகர் மாவட்டம் உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விததுள்ளது. சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மலையேற பக்கதர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் அமாவாசைக்கு இன்று முதல் வரும் 25 ஆம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.