திருவனந்தபுரம்: சபரிமலையில் இனிமேல் பக்தர்கள் நாள் ஒன்றுக்கு  17 மணி நேரம் தரிசனம் செய்யும் வகையில், தரிசன நேரத்தில் மாற்றம் செய்து தேவசம் போர்டு  அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலம், மகரவிளக்கு பூஜைகள் வருகின்ற நவம்பர் 16ம் தேதி தொடங்க உள்ளது.  இந்த  வரும் மண்டல – மகரவிளக்கு சீசனில், சபரிமலை கோவில் தரிசன அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக 17 மணி நேரம் கோவில் நடை திறந்திருக்கும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.

முன்னதாக, சபரிமலையில், ஸ்பாட் புக்கிங் முறையை தேவஸ்தானம் ரத்து செய்வது அறிவித்தது. மேலும் ஆன்ன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தேவசம் போர்டு கூறியது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து,  திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தில் தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெறும் சபரிமலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், லைமை அர்ச்சகர்கள், அரசு சார்பில் அதிகாரிகள், காவல்துறையினர் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில்  நடப்பு ஆண்டில் பக்தர்களின் தரிசன நேரத்தை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக  சபரிமலை கோவிலில் தரிசன நேரம் மாற்றி யமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவசம் போர்டு  தலைவர் பி.எஸ்.பிரசாந்த், இந்த வருடம்  சபரிமலையில் மெய்நிகர் வரிசை முறை மட்டுமே அமலில் இருக்கும், ஆனால் ஒவ்வொரு பக்தர்களுக்கும் தரிசனம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். தேவையான ஏற்பாடுகளைச் செய்ய  அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.

“கடந்த ஆண்டு புனித யாத்திரை காலத்தில், கோவிலில் சில நாட்களாக வரலாறு காணாத கூட்டம் காணப்பட்டது. அவர்களை போலீசார் தடுக்க வேண்டியதாயிற்று. நாங்கள் அதனை ஆராய்ந்து பார்த்த போது, குறிப்பிட்ட நாட்களில் 20,000 க்கும் மேற்பட்ட ஸ்பாட் புக்கிங் இருந்தது. எங்களைப் பொறுத்தவரை, வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கையைப் பற்றியது அல்ல, ஆனால் பக்தர்களின் பாதுகாப்பே முதன்மையானது” என்றவர், அதனால்தான் இந்த ஆண்டு ஸ்பாட் புக்கிங் ரத்து செய்யப்பட்து என்றவர், அதற்கு பதிலாக கோவில் நடை திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது என்றார்.

அதாவது,  இந்த ஆண்டு அய்யப்போன் கோவில் நடை, அதிகாலை 3 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், பின்னர் பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் திறந்திருக்கும். அந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ளலாம். இதன் மூலம் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 17 மணி நேரம் தரிசனம் கிடைக்கும். இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என்று  நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், ஏற்கனவே  ஆன்லைன் முன்பதிவுகளுக்கு 48 மணிநேர சலுகை காலம் வழங்கப்படும். கடந்த ஆண்டு மண்டலம்-மகரவிளக்கு யாத்திரை காலத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களை நிர்வகிக்க தவறிய கேரள அரசு மீது கடும் சர்ச்சை எழுந்தது. கூட்டத்தை நிர்வகித்தல் மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்படுவதில் பல குறைபாடுகள் யாத்ரீகர்கள் தரிசனம் இல்லாமல் திரும்பிச் செல்ல வழிவகுத்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.