கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம்! அமைச்சர் துரைக்கண்ணு

Must read

சென்னை:

கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை  99 ரூபாய் 20 பைசா  நிர்ணயம் செய்திருப்பதாக  அமைச்சர் துரைக்கண்ணு தமிழக சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், அதிமுக உறுப்பினர்,  பொள்ளாச்சி ஜெயராமன், கொப்பரை தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது, கொப்பரை தேங்காயின் விலை குறைந்த பட்சம்,  கிலோ 100 ரூபாய் 21 பைசாவாக அரசு நிர்ணயிக்க வேண்டும்  என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, தமிழகத்தில் 4 லட்சத்து, 35 ஆயிரத்து 621 எக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுவதாகவும் அதன் மூலம்,  470 கோடியே 64 லட்சம் தேங்காய்கள்  உற்பத்தியாகிறது என்று கூறினார்.

மேலும், கொப்பரை தேங்காய்களுக்கு நல்ல விலை கிடைக்கும் பொருட்டு தேங்காய் அதிகம் விளையும் மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரைகள், குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்பட இருப்பதாக தெரிவித்தவர்,   தென்னை விவசாயிகளிடம் இருந்து எளிதில் கொள்முதல் செய்வதற்காக, அந்தந்த மாவட்டங்களில் கொள்முதல் மையங்களை திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.

மேலும், கொப்பரை தேங்காய்க்கு  மத்திய அரசு அறிவித்த குறைந்த பட்ச ஆதார விலையின் அடிப்படையில், பந்து கொப்பரை கிலோ ஒன்றுக்கு 99 ரூபாய் 20 பைசா வீதத்திலும், அரவை கொப்பரை கிலோ ஒன்றிற்கு 95 ரூபாய் 21 பைசா வீதத்திலும் கொள்முதல் செய்யப்படும்  என்று கூறினார்.

கொப்பரை தேங்காய் கொள்முதல் பணி நாளை முதல்  அடுத்த ஆறு மாத காலத்திற்கு  நடை பெறும் என்று கூறியவர், அந்த 6 மாதங்களில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் பந்து கொப்பரையும், 45 ஆயிரம் மெட்ரிக் டன் அரவைக் கொப்பரையும் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது என்றும் கூறினார்.

கொப்பரை தேங்காய் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், அரசின் கொள்முதல் நிலையங் களை அணுகி தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.

More articles

Latest article