சென்னை:

சாத்தான்குளம் சம்பவம் போல் நடைபெறாமல் தடுக்க விசாரணை கைதிகளை பாதுகாக்க தமிழகம் முழுவதும் தடுப்புக்காவல் மையம் டிஜிபி திரிபாதி உத்தரவிட்டு உள்ளார்.

சாத்தான்குளத்தில் வணிகர்களான தந்தை மகன் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீதிமன்றம், மனித உரிமை ஆணையம், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், சாத்தான்குளம் சம்பவம் போல் நடைபெறாமல் தடுக்க விசாரணைக் குற்றவாளிகளை பாதுகாக்க தமிழகம் முழுவதும் டிஎஸ்பி மற்றும் உதவிக்கமிஷனர் மேற்பார்வையில் ‘‘தடுப்புக் காவல் மையம்’’ எனப்படும் தனி இடம் அமைக்க வேண்டும் என்று டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மாநிலம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி திரிபாதி சுற்றிக்கை அனுப்பி உள்ளார். அதில்   கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் ஒவ்வொரு சப் டிவிஷனிலும், நகரங்களிலும் உதவிக்கமிஷனர் சரகத்திலும் விசாரணைக் கைதிகளை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு ‘டிடென்ஷன் மற்றும் பிரிவென்ஷன் சென்டர்’ என்ற பெயரில் அழைக்கப்படும் தடுப்புக்காவல் மையங்கள் அமைக்க வேண்டும்.

அங்கு விசாரணை கைதிகளை பாதுகாப்பதற்குரிய தங்கும் அறை உள்ளிட்ட அனைத்தும் வசதிகளும் ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டும். அதற்கான இடம் அமையவில்லை என்றால் உடனடியாக அந்த சரக காவல் நிலையங்களுக்கு அருகில் அதனை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதன்படி ஜாமீனில் செல்ல முடியாத வழக்குகளில் கைதாகும் விசாரணைக்குற்றவாளிகள் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படக்கூடாது. அவர்கள் தடுப்புக்காவல் மையங்களில் டிஎஸ்பி அல்லது உதவிக்கமிஷனர் மூலம் விசாரணை நடத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்.

மேலும் தற்போதுள்ள கால சூழ்நிலையில் விசாரணைக் கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதனை செய்தல் அவசியம். தற்போது உள்ள கால சூழ்நிலைக்கேற்ப இந்த ஏற்பாடு செயல்படுத்தப்படுகிறது.

காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு அழைத்து வரப்படுகிறவர்களுக்கு சாத்தான்குளம் சம்பவம் போன்று மோசமான சூழலை தடுக்கும் விதமாகவும் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மேலும் காவல் நிலையங்களில் ‘ஜி டி’ என்றழைக்கப்படும் பொது டைரியில் சட்டப்படி அன்றாட நிகழ்வுகள் பதிவு செய்யப்படவேண்டும். அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் காவல் நிலையங்களில் நடக்கும் சம்பவங்கள் குறித்து டிஎஸ்பிக்கோ, உதவிக்கமிஷனருக்கும் அந்த ஜிடி என்ட்ரி புத்தகம் மூலம் தெரியப்படுத்தப்படவேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.