அயோத்தி
கடந்த 1993 ஆம் வருடம் அயோத்தி ராமர் கோவிலின் முதல் பூசாரி படுகொலை செய்யப்பட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன
லால் தாஸ் என்பவர் அயோத்தி ராமர் கோவிலின் முதல் தலைமை பூசாரி ஆவார். லால் தாஸ் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன் – மசூதியின் மையக் குவி மாடத்தின் கீழ் அமைந்த சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி கோவிலுக்கு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முதல் தலைமை பூசாரி.
இவர் ராமர் கோயில் பூசாரியாக இருந்தபோது மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டுவது என்பது ஹிந்துக்களின் ஓட்டுகளை பெறுவதற்காக மக்களிடையே மூட்டப்படும் சண்டை என்றார். மேலும் இது மத உணர்வுகளைத் தூண்டக்கூடிய அப்பட்டமான அரசியலைத் தவிர வேறில்லை என்று பகிரங்கமாக எதிர்த்தார்.
அப்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஊழல் குற்றச்சாட்டுச் சுமத்தி லால் தாஸை தலைமைப் பூசாரி பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கியது.மேலும் லால் தாஸ் ஒரு கம்யூனிஸ்ட் என்றும், கோயிலுக்குள் பகத்சிங் படத்தை வைத்திருந்தார் என்றும் அவர் மீதான வதந்திகள் பரப்பப்பட்டன.
தமது பணி நீக்கத்தை எதிர்த்து தாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 1993 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி, நள்ளிரவில், அயோத்தியில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் ராணிபூர் சத்தர் கிராமத்தில் லால் பிணமாகக் கிடந்தார். அந்த வழக்கு நிலத்தகராறு காரணமாக அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று முடிக்கப்பட்டது.
நன்றி : நந்தினி ஆனந்தன் வலைப்பதிவு