நாளை திருவாதிரை விரதம்  – விளக்கம்
திருமணமான பெண்களை, தீர்க்க சுமங்கலியாக வாழ வைக்கும் மார்கழி திருவாதிரை மாங்கல்ய விரதம் !
மார்கழி திருவாதிரை மாங்கல்ய நோன்பு யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்குச் சிவ பார்வதியின் அருள் கிடைக்கும். தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும்.
சிறப்பு : மார்கழி 5, திங்கள்கிழமை, டிசம்பர் 20/12/2021 ஆருத்ரா தரிசனம்.
வழிபாடு: நடராஜர் அபிஷேகம், தாண்டவ தீபாராதனை தரிசித்தல்.
திருவாதிரை என்றதும் நம் நினைவுக்கு வருவது சிதம்பரம் திருத்தலம் தான். சிதம்பரம் என்றதும் நம் நினைவுக்கு வருபவர் நடராஜ பெருமான். மார்கழி மாதத்தின் திருவாதிரை, சிறப்பானதொரு நாளாக போற்றப்படுகிறது. இந்தநாளில், வீடுகளில் பெண்கள் செய்கிற முக்கியமான வழிபாடு… மாங்கல்ய விரதம். மாங்கல்ய வழிபாடு, மாங்கல்ய நோன்பு, மாங்கல்ய விரதம் என்றெல்லாம் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மார்கழி திருவாதிரை நாளில், தாலிச்சரடு மாற்றிக் கொள்வது மிகுந்த பலனைத் தந்தருளும் என்பது ஐதீகம். நாளைய தினம் 20ம் தேதி திங்கள்கிழமை ஆருத்ரா தரிசன வைபவம். இந்தநாளில்தான் மாங்கல்ய நோன்பு இருக்க வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
தலைக்கு எண்ணெய்யும் சிகைக்காயும் கொண்டு குளிக்க வேண்டும். முகத்துக்கு மஞ்சள் பூசிக்கொண்டு குளிக்க வேண்டும். குளித்துவிட்டு வந்து, பூஜையறையில் அமர்ந்து மஞ்சள் கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட வேண்டும். சிவ பாராயணம் செய்தும் தேவியின் ஸ்லோகங்களையும் சொல்லி வழிபட வேண்டும்.
‘இந்த நாள் மங்களகரமான நாளாக அமையட்டும். எங்கள் குடும்பத்தில் வாழ்நாள் முழுவதும் சுபிட்சம் நிலவட்டும். கணவரின் ஆயுள் நீடித்திருக்கட்டும். மாங்கல்யம் பலம் பெறட்டும்’ என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
பொதுவாகவே, சூரிய உதயத்துக்கு முன்னதாகவே இவற்றையெல்லாம் செய்து வழிபட்டு விட்டு, புது மஞ்சள் சரடில் தாலி கோர்த்து அணிந்து கொள்ளலாம். சூரிய உதயத்துக்குப் பிறகுதான் இந்த வழிபாடு செய்வதாக இருந்தாலும் தோஷமில்லை. ராகுகாலம், எமகண்டம், குளிகை முதலான நேரங்களைத் தவிர்த்து தாலிச்சரடு கட்டிக்கொள்ளலாம்.
காலையிலேயே களியமுது உள்ளிட்டவை நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.  வீட்டில், பூஜையின் போது கணவர் கொண்டே மஞ்சள்சரடை கட்டிக் கொள்ளலாம். அல்லது அத்தை, அம்மா, நாத்தனார் முதலான பெரியவர்கள் இருந்தால் அவர்களைக் கொண்டும் மஞ்சள் சரடு (தாலிச்சரடு) கட்டிக்கொண்டு நமஸ்கரிக்கலாம்.
சுமங்கலிகள் அவசியம் மேற்கொள்ள வேண்டிய பூஜையை ஆண்களும் வழிபடலாம். மனைவியின் ஆயுளுக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் வேண்டிக் கொள்ளலாம். திருமணம் ஆகவேண்டும் என்பதற்காக, ஆண்களும் கன்னியரும் கூட இந்த பூஜையை மேற்கொள்ளலாம்.
அம்பாளின் திருநாமங்களில் கல்யாணி என்பதும் ஒன்று. கல்யாணி என்பவள் நித்திய கல்யாணி. அதாவது நித்திய சுமங்கலி. எனவே அம்பாளின் திருநாமங்களையும் ஸ்லோகங்களையும் பாராயணம் செய்வதும் ஒலிக்க விட்டுக் கேட்பதும் எண்ணற்ற பலன்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அருகில் உள்ள பெண்களை அழைத்து, மங்கலப் பொருட்களை வழங்கி நமஸ்கரிக்கலாம். ஏழு விதமான காய்கறி களைக் கொண்டு அல்லது 21 வகையான காய்கறிகளைக் கொண்டு கூட்டு, சாம்பார், பொரியல் எனச் சமைத்து, படையலிட்டு வழிபட வேண்டும்.
காலையில் நடராஜர் ஆராதனை அதாவது ஆருத்ரா தரிசனம் பார்த்து விட்டு விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு. அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று நடராஜர் பெருமானை வணங்கிவிட்டு விரதம் இருப்பவர்களும் உண்டு.
விரதத்தைக் காலையில் இருந்து தொடங்கி மாலையில் விளக்கேற்றி ஏழு அல்லது 21 விதமான காய்கறிகளைக் கொண்டும் அதிரசம் முதலான பட்சணங்களைக் கொண்டும் வழிபட்டு விட்டு, நைவேத்தியம் செய்து விட்டு, விரதத்தை நிறைவு செய்வார்கள் பெண்கள்.
உண்ணா நோன்பு இருக்க இயலாதவர்கள், ஏதேனும் திரவ உணவு, பழச்சாறு முதலான உணவை உட்கொள்ளலாம் தவறில்லை.நமது வீட்டில் வடை, பாயசம் செய்து வழிபடலாம். சாதம், சாம்பார், களி செய்யலாம். 18 வகைக் காய் சேர்த்து சாம்பார் அல்லது கூட்டு செய்யலாம்.
மாலை 6 மணிக்குத் தீபம் ஏற்றி முப்பெரும் தேவியரை வணங்கி நமது குல தெய்வத்திற்குப் படையல் போட்டு வணங்கி அதை கணவருக்குச் சாப்பிடப் படைக்கலாம்.
இந்த நாளில் கணவர் சாப்பிட்ட இலையில் மனைவி சாப்பிட வேண்டும். கணவனிடம் ஆசி பெற்று மஞ்சள் குங்குமம் வைத்து வணங்கலாம். இந்த நோன்பு யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்குச் சிவ பார்வதியின் அருள் கிடைக்கும். தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும்.
மார்கழி திருவாதிரையில், ஆருத்ரா தரிசன நன்னாளில், மாங்கல்ய நோன்பு இருங்கள். புதுச்சரடு மாற்றிக் கொள்ளுங்கள். வீட்டுப் பெரியவர்களையும் கணவரையும் நமஸ்கரித்து ஆசி பெறுங்கள். தீர்க்கசுமங்கலியாக வாழ்வீர்கள்!