திருமேனியழகர் கோவில், திருமயேந்திரப்பள்ளி
சிதம்பரத்தில் சீர்காழி சாலையில் கொள்ளிடம் சென்று, அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக சென்று நல்லூர் – முதலை மேடு ஆகிய ஊர்களைக் கடந்து திருமயேந்திரப்பள்ளி சிவஸ்தலம் அடையலாம். அருகில் உள்ள மற்றொரு சிவஸ்தலம் திருநல்லூர் பெருமணம் (ஆச்சாள்புரம்) 3 கி. மி. தொலைவில் உள்ளது. சிதம்பரம், சீர்காழியிலிருந்து மயேந்திரப்பள்ளிக்கு ஆச்சாள்புரம் வழியாக நகரப் பேருந்துகள் செல்கின்றன. மகேந்திரப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1/2 கி.மி. தொலைவில் ஆலயம் உள்ளது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இவ்வாலயம் கொள்ளிட நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இத்தலத்திலிருந்து 2 கி.மி. தொலைவில் கொள்ளிடம் கடலில் கலக்கிறது. இந்திரன் (மகேந்திரன்) வழிபட்டதால் இத்தலத்திற்கு மகேந்திரப்பள்ளி என்று பெயர். திருமேனியழகர் ஆலயம் கிழக்கு நோக்கி மூன்று நிலைகளை உடைய சிறிய இராஜ கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோவில் எதிரே மயேந்திர தீர்த்தம் உள்ளது.
இராஜகோபுரம் வழியே உள்ளே சென்று வெளிப் பிரகாரம் வலம் வந்தால் விநாயகர், காசிவிசுவநாதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமால், சிவலிங்கம், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் ஆகியவற்றைக் காணலாம். பிரகார வலம் முடித்து அடுத்துள்ள வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலதுபுறம் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது.
மேலும் உள்ளே சென்றால் வலதுபுறம் நடராச சபையில் நடராஜருடன் சிவகாமியும் மாணிக்கவாசகரும் உடன் காட்சியளிக்கின்றனர். நேரே சிவலிங்கத் திருமேனியாக மூலவர் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார். பங்குனி மாதத்தில் ஒரு வார காலம் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஆலயத்தில் நவக்கிரக சன்னதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகருக்கு தனி சன்னதி இருக்கிறது. இவருக்கு இருபுறமும் ராகு, கேது இருவரும் உள்ளனர்.